துத்திகீரை எனும் அற்புத மூலிகை! பல நோய்களுக்கு இது உணவே மருந்தாக அமைகிறது!

நம் முன்னோர்கள் உணவே மருந்தாக பல வகைக் கீரைகளைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவற்றில் பல இன்று உணவாக இல்லாமல், வெறும் மருந்தாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அற்புத மூலிகையே துத்தி.


மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து கற்கண்டு சேர்த்துச் சில தினங்கள் சாப்பிட்டால், சூட்டினால் ஏற்பட்ட இருமல் தீரும். குடல் புண் மற்றும் சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

 எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும்

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.