ஆரோக்கியமான வாழ்விற்கு மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுங்க! உண்மையான ருசின்னா என்னனு தெரியும்!

மண் பானையில் சமைக்கும் போது சமைக்க பயன்படுத்தும் உணவு பொருள்கள் அனைத்துமே அதன் சத்துகளை இழக்காமல் நமக்கு தருகிறது. இன்று நாம் சமைக்கும் அலுமினியம், சில்வர் பாத்திரங்களில் இருக்கும் உலோகத்தன்மை உணவின் தன்மையை மாற்றிவிடுகிறது.


நீண்ட ஆயுளை தருவதில் ஆரோக்கியமான உணவும் முக்கியபங்கு வகிக்கிறது. சத்தான உணவு பொருள்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவதற்கேற்ப திட்டமிட்டு எடுத்து கொள்ளும் போது அந்த சத்தை இழக்காமல் எடுத்துகொள்ளவும் இந்த மண் பானையில் சமைப்பது தான் சிறந்தது.

மண் பாத்திரங்களில் செய்யப்படும் உணவு அவ்வளவு எளிதில் கெடாது. காரக்குழம்பும், மீன் குழம்புகளும் ஒரு வாரம் வரை மண் பானையில் அதே வாசத்தோடு மணக்கும். இன்று நாம் சமைக் கும் உணவு பொருள்களை சூடான ஹாட் பாக்ஸில் வைத்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அதன் சுவையும் மாறி கெட்டுவிடவும் செய்கிறது. ஆனால் மண் பாத்திரங்களில் உணவு அப்படியே இருக்கும்.

வேறு பாத்திரங்களில் உணவை எடுத்துவைக்கும் போது அடிக்கடி அதை சூடு படுத்தி வைப்போம். இப்படி சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதன் சத்துகள் குறையவே தொடங்கும். ஆனால் மண் பானையில் சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்த தேவையில்லை.

உண்ணும் உணவில் இருக்கும் அமிலத்தன்மை உடலுக்கு தேவையான அளவு இருக்கவேண்டும். அவை ஏற்ற இறக்கத்தில் இருந்தால் உடலில் ஆரோக்கிய குறைபாடு உண்டாகவே செய்யும். அப்படி உணவில் இருக்கும் அமிலதன்மையை இந்த மண்பானையில் சமைக்கும் போது சமப்படுத்துகிறது.