ஹீலர் பாஸ்கர் கைது சரிதானா..? தடுப்பூசி போடுவது ஆபத்தா..?

மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டிருக்கிறார் ஹீலர் பாஸ்கர். இது சரிதானா என்று இணையதளத்தில் பெரும் விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறது.


நம்மை ஒரு கூட்டம் கண்மூடித்தனமாகப் பின்பற்றும்போது அவர்களை தவறாக வழிநடத்தக்கூடாது. ஹீலர் பாஸ்கர் முதல் அரசியல் தலைவர்கள் வரை இதைப் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா அச்சம் தொடர்பாக ஹீலர் பாஸ்கர் வெளியிட்ட பதிவுகள் அருவருப்பானவை, ஆபத்தானவை என்று கூறுகிறார் தி.முருகன்.

நாம் அறிவியலைப் பார்த்து வியக்கலாம்; விமர்சனம் செய்யலாம். ஆனால், அறிவியலை நிராகரிப்பது மனித குலத்துக்கு எதிரான செயல். சுடுதண்ணீரில் ஆரம்பித்து வெயில் வரை கொரோனாவுக்காக வாட்ஸ்அப் குழுக்களில் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் இல்லை. இந்த வதந்திகள் காட்டுத்தீ போல பரவுகின்றன. உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் வெளியிடும் உண்மைகளைப் படிக்கவோ, ஃபார்வர்டு செய்யவோ ஆளில்லை.

என் பாட்டி யார் மீதாவது கோபம் வந்தால், ‘உன்னை பேதி, மாரியாத்தா வந்து தூக்கிட்டுப் போக!’ என்பார். அவர் வயதில் இருந்த பலரும் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். காலராவும் பெரியம்மை நோயும் எந்த அளவுக்கு மக்களைக் காவு வாங்கின என்பதற்கு மக்கள் மத்தியில் புழங்கிய இதுபோன்ற பேச்சுகள் ஆதாரம். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்கிய பிறகே காலரா சாவுகள் குறைந்தன. தடுப்பூசிகள் போடப்பட்டே பெரியம்மை ஒழிக்கப்பட்டது. இப்படி தடுப்பூசிகளின் வெற்றிக்கதைகள் நிறைய உண்டு.

இன்று தடுப்பூசிகளை நிராகரித்து, தமிழர் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் கூட்டம் பெருகிவருகிறது. காலராவும் பெரியம்மையும் காவு வாங்கிய அந்தக் காலத்தில்கூட நம்மிடம் சித்தர் நூல்கள் இருந்தன. நாம் இன்று சிலாகித்துப் பேசும் தமிழரின் பாரம்பரிய வாழ்க்கைமுறை இருந்தது. ஆரோக்கியமான உணவுகள் இருந்தன. வாட்ஸ்அப் குழுக்களில் தினமும் அதிகாலையும் ஷேர் செய்யும் பெருமிதங்கள் எல்லாம் இருந்தன. ஆனால், என்ன செய்ய முடிந்தது?

கொரோனா தடுப்பூசிக்காக இன்று உலக அளவில் நாடுகளிடையே நடக்கும் பேரங்கள், அதன் அவசியத்தையும் தேவையையும் உணர்த்துகின்றன. பூண்டு சாப்பிட்டால் கொரோனா காலி என்றிருந்தால், இன்று பூண்டு கிலோ 10 ஆயிரம் ரூபாய் விலையில் இருந்திருக்கும். நம்மைவிட அதிகம் பூண்டு சாப்பிடுவார்கள் சீனர்கள். நம்மைப் போலவே பாரம்பரிய மருத்துவத்தை அரசு சார்ந்த முறையில் வழங்கும் நாடு அது. என்றாலும், பூண்டை மறந்துவிட்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் இறங்கிவிட்டது அந்த நாடு.

பில் கேட்ஸை சாமர்த்தியமான வியாபாரியாக மட்டுமே உலகம் பார்க்கிறது. இப்போது அவர் மைக்ரோசாஃப்ட் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி, முழுக்க முழுக்க சமூகப் பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார். ஏழை நாடுகளில் இருக்கும் மக்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல கோடி டாலர்களைக் கொட்டுகிறார். இப்போதும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு அவர் 100 மில்லியன் டாலர் கொடுத்திருக்கிறார்.

உதாரணமாக, மலேரியா. இது ஏழை நாடுகளை மட்டுமே தாக்கும் நோய். அதனால், இதற்குத் தடுப்பூசி கண்டறிய மேற்கத்திய உலகம் ஆர்வம் காட்டவில்லை. மலேரியா தடுப்பூசிக்கான ஆராய்ச்சி, பில் கேட்ஸ் முயற்சியில் நடைபெறுகிறது. இது வெற்றி அடைந்தால் ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் பல ஏழைகள் பரிதாபமாக உயிரிழப்பது தடுக்கப்படும். அப்போதும் ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள் ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளாதே’ என்று குறுக்கே நிற்பார்கள்.

எல்லா மருத்துவ முறைகளும் 100 சதவிகிதம் கச்சிதமானவை அல்ல! அவற்றில் பல போதாமைகள் இருக்கலாம். அவற்றைப் பின்பற்றும் மருத்துவர்களிடம் பலவீனங்கள் இருக்கலாம். ஆனால், பாரம்பரியத்தைப் போற்றுவதாகச் சொல்லி நவீன மருத்துவத்தை நிராகரிப்பது மோசமானது. கொரோனா வைரஸை விட இவர்கள்தான் ஆபத்தானவர்கள்.