மதுரை: தான் படித்த அரசுப் பள்ளிக்கு ரூ.15 கோடி நன்கொடையை ஹெச்சிஎல் நிறுவன அதிபர் ஷிவ் நாடார் அளித்துள்ளார்.
படித்த அரசுப் பள்ளிக்கூடத்தை உலகத் தரத்திற்கு மாற்றிக் கொடுத்த சிவ நாடார்! குவியும் லைக்ஸ்!

மதுரையில் உள்ள இளங்கோ அரசுப் பள்ளியில் 7, 8ம் வகுப்புகளை படித்த ஷிவ் நாடார், தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தின் மூலமாக, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிலதிபராக வலம் வருகிறார். இந்நிலையில், கடந்த 1937ம் ஆண்டில் கட்டப்பட்ட இளங்கோ அரசுப் பள்ளி, கடந்த 2011ம் ஆண்டின்போது, கட்டிடங்கள் பாழடைந்து, மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.
இதன்போது, அங்கே ஒரு நிகழ்ச்சிக்காக வந்த ஷிவ் நாடார், பள்ளியின் நிலையை பார்த்து, கண்கலங்கிய நிலையில், பள்ளிக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதை வைத்து, புதியதாகச் சில கட்டிடங்கள் இளங்கோ பள்ளியில் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு இடம் தரப்பட்டுள்ளன.
24 மணிநேர மின்சார வசதி, தண்ணீர் வசதி, சூரிய ஒளியில் இருந்து மின் விநியோகம், அதி நவீன கணினி லேப், ஏசி செய்யப்பட்ட லைப்ரரி, விளையாட்டு மைதானம், இப்படி பல வசதிகளை உள்ளடக்கியதாக, இளங்கோ அரசுப் பள்ளி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஷிவ் நாடாரின் நன்கொடையால் சாத்தியமாகியுள்ளது.
இதுதவிர, மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் ஹெச்சிஎல் சார்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு, ஹெச்சிஎல் சார்பாக, ஸ்காலர்ஷிப் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷிவ் நாடார் போல, ஒவ்வொரு தொழிலதிபரும், தங்கள் படித்து வளர்ந்த அல்லது தங்கள் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இப்படி நன்கொடை வழங்கி உதவினால், தனியார் பள்ளிகளைவிட, அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி...