இந்த ஹானர் செல்போனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.4 லட்சமாம்! செம தரமான காரணம்!

ஜெர்மனியில் ரயிலில் ஊழியர் தவறவிட்ட ஹானர் செல்போனை கண்டுபிடித்துக் கொடுத்தால் நான்கு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் ஹவேய் நிறுவனத்தின் உப நிறுவனமான ஹானர் தனது இருபதாவது வரிசை செல்போன்களை மே 21-ம் தேதி லண்டனில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செல்போன்கள் தயாராகியுள்ள நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட செல்போன்களை பரிசோதனைக்காக ஊழியர்களுக்கு நிறுவனங்கள் கொடுப்பது வழக்கம்.

அதேபோல ஜெர்மனியில் ஒரு ஊழியருக்கு வழங்கப்பட்ட ஹானர் செல்போன் ரயில் பயணத்தின்போது தொலைந்து போய் உள்ளது. இச்சம்பவம் கடந்த 21ம் தேதி நடந்துள்ளது. இது குறித்து அந்த ஊழியர் தனது நிறுவனத்திடம் தெரிவிக்கவே, புதிய ரக செல்போனில் தகவல்கள் முன்கூட்டியே கசிவதை தவிர்ப்பதற்காக ஹானர் ஒரு திட்டம் போட்டது. அதன்படி அந்த செல்போனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு நான்கு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஹானர் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் ஒருபுறமிருக்க, புதிய ரக செல்போனின் திறன்களை ஆய்வு செய்து விமர்சனம் செய்து பணம் பார்ப்பதற்காக இணையதளங்களும் களத்தில் இறங்கியுள்ளன. ஏற்கனவே ஆப்பிள் மற்றும் கூகுள் பிக்சல் நிறுவனங்களின் செல்போன்கள் காணாமல் போன போதும் இதேபோல பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.