ஜாதிய மோதலை தூண்டும் ரஞ்சித்தை நேரில் பார்த்தால்..! கொதிக்கும் ஹரி நாடார்!

ராஜராஜ சோழனுக்கு எதிராகப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு ஏற்கனவே முக்குலத்தோர் புலிப்படை கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பனங்காட்டுப் படை ஆவேசம் காட்டியிருக்கிறது.


வாழ்க்கையில் ஒவ்வொரு தரப்பு மக்களுக்குக்கும் முன்னேறுவதற்கும், இலட்சியங்களை அடைவதற்குமான இலக்குகள் பல உள்ளன. ஆனால் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், தனி நபர்களும் உணர்வு என்ற பெயரிலும் கொள்கை என்ற பெயரிலும் மக்களில் பலரை தங்கள் இலக்குகளில் இருந்து நடைமுறைக்கு உதவாத வெட்டி விவகாரங்களில் திருப்பி வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றனர். 

அந்த வரிசையில் அண்மையில் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் விவகாரம்தான் ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் பேசிய விவகாரம். சர்ச்சைப் பேச்சுக்களால் பப்ளிசிட்டியை தேடிக் கொள்ளும் உத்தியை இந்த விவகாரத்திலும் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். 

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் கூட்டத்தில் பேசிய ரஞ்சித், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பது உண்மையல்ல என்றும் அது இருண்ட காலம் என்றும் கூறினார். 

பா.ரஞ்சித் கருத்து குறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  முக்குலத்தோர் புலிப்படை தமிழ்ப் பேரரசன் இராசராசச் சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம் என்றும், தமிழர் மரபின் உச்சம் என்றும் கூறியுள்ளார். நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள் என்றும்,  அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர் என்றும் கூறியுள்ளார்.

தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ள அவர் இது அறிவு கலந்த எச்சரிக்கை என்று கூறியுள்ளார். இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பனங்காட்டுப் படை கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், இயக்குநர் பா.ரஞ்சித், ராஜ ராஜ சோழனை குறித்து அவதூறாக பேசியதை நாடார் சமூகம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

இது சாதிய மோதல்களை உருவாக்க முக்கிய காரணமாக அமையும் என்ற அவர், ரஞ்சித்தை நேரில் பார்க்கும் உண்மையான தமிழன் யாராக இருந்தாலும், மாமன்னர் ராஜ ராஜ சோழனை அவதூறாக பேசியதற்காக கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கண்டனக் கணைகளை தொடுத்தார்.