வாக்கு கேட்க கை நீட்டிய அரசியல் தலைவரின் சகோதரி! விலை உயர்ந்த மோதிரத்தை அபேஸ் செய்த பலே ஆசாமி!

ஐதராபாத்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கையில் இருந்த மோதிரத்தை தொண்டர் ஒருவர் அபகரித்துச் சென்றார்.


ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக, ஜெகன் மோகன் ரெட்டி, களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். இது தவிர, மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள அவர், தீவிர பிரசார பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

ஜெகனுக்கு ஆந்திர மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தெலுங்கு நடிகரான மோகன் பாபு, ஜெகன் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், ஜெகனின் சகோதரி சர்மிளா, குண்டூர் பகுதியில், தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

பேருந்தில் சென்றபடி, அவர் பிரசாரம் செய்தார். வழியில், பலரும் அவரிடம் கை குலுக்கி, தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். ஒரு இடத்தில், திடீரென சர்மிளாவின் கையை பிடித்து குலுக்கிய நபர், கையில் இருந்த மோதிரத்தை உருவிக் கொண்டு, கூட்டத்தில் மறைந்துவிட்டார். 

இதில், சர்மிளா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் வெள்ளத்தில், மோதிரம் திருடிய நபரை அடையாளம் காண முடியவில்லை. இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.