பெண்களை பெண்களே திருமணம் செய்து கொள்ளும் விநோத கிராமம்! எங்கு, ஏன் தெரியுமா?

திருமணம் நடைபெறும்போது, மாப்பிள்ளையின் சகோதரி ஒருவர், மணப்பெண் கழுத்தில் தாலி கட்டும் விநோத பழக்கம் சில கிராமங்களில் உள்ளது.


குஜராத் மாநிலத்தின் சூர்கெடா, சனாடா, ஆம்பல் ஆகிய 3 கிராமங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மக்களிடையே ஒரு விநோத பழக்கம் இன்றைக்கும் சம்பிரதாயமாக தொடர்கிறது. அதாவது, இம்மூன்று கிராம மக்கள் வழிபடும் கடவுள்கள் 3 பேரும் திருமணமாகாத ஆண்கள் ஆவர். எனவே, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இம்மூன்று கிராமங்களிலும் திருமணம் நடைபெறும்போது, மாப்பிள்ளை வீட்டிலேயே பூட்டி வைக்கப்படுவாராம்.

அவருக்குப் பதிலாக, அவரது சகோதரி அல்லது திருமணமாகாத உறவினப் பெண் யாரேனும் மாப்பிள்ளை போல உடை அணிந்து, திருமண மேடைக்குச் செல்வார்களாம். அங்கே, மணப்பெண்ணிற்கு தாலி கட்டுவது முதல் அனைத்து சடங்குகளையும் அவர்களே செய்வார்களாம். இதன்போது, மாப்பிள்ளை அவரது வீட்டில்தான் இருப்பாராம். எங்கும் வரமாட்டாராம். இப்படி செய்வதன் மூலமாக, மாப்பிள்ளையின் உயிருக்கு எந்த பாதிப்பும் வராமல், தங்களது 3 ஆண் தெய்வங்கள் காப்பாற்றுவதாக, கிராம மக்கள் நம்புகின்றனர். 

அதேசமயம், இந்த பழக்கத்தை கேலி, கிண்டல் செய்துவிட்டு, சாதாரண முறையில் திருமணம் செய்வோருக்கு, சில மாதங்களிலேயே விவாகரத்து முதல் அனைத்து வித பிரச்சனைகளும் ஏற்படுவதாக, நேரிலேயே பலமுறை பார்த்துள்ளதாக, கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். இது மூட நம்பிக்கையா அல்லது மக்களின் நம்பிக்கையா என்று புரியாமல் சம்பிரதாயத்தை பின்பற்றுவதாக, இளைய தலைமுறையினர் தெரிவிக்கின்றனர்.