அடுத்தடுத்து வீடு தேடி வரும் முதலைகள்! திக் திக் பீதியில் இருக்கும் நகரம்! மழை பெய்ததால் இப்படி ஒரு துயரமா?

வதோதரா: குஜராத் மாநிலத்தில் மழை, வெள்ளம் காரணமாக, குடியிருப்புப் பகுதிகளில் முதலை நடமாட்டம் மிகுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அம்மாநிலத்தின் வதோதரா மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் காணப்பட்டது. இந்நிலையில், தற்போது வதோதரா நகரை சுற்றி பல பகுதிகளிலும் வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளது.

ஆனால், வெள்ள நீர் வடிந்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், நீர் வடிய வடிய சாலைகளில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்து வதோதரா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

ஆம், முதலைகள் ஆங்காங்கே நீரில் நீந்தி வருவதோடு, நீர் வற்றிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி இரை தேடி நடமாட தொடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். 

சில இடங்களில் பொதுமக்களே தன்னார்வத்துடன் சாலைகளில் சுற்றி திரியும் முதலைகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தாலும், பல இடங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

வதோதரா தெருக்களில் முதலைகள் சுற்றி திரிவது, அவற்றை பொதுமக்களும், தன்னார்வலர்களும் தேடித் தேடி பிடிப்பது தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.