சீமானை விரட்டுவதற்கு களம் இறங்குகிறாரா கௌதமன்? இரண்டு பேருக்கும் என்ன அக்கப்போர்?

வாய் கிழிய பேசும் தினகரனும், கமல்ஹாசனும் இடைத்தேர்தல் களேபரத்தில் காணாமல் போவதை விரும்பாமல் நைசாக நழுவிக்கொள்ள, வழக்கம்போல் சீமான் மட்டும் தனித்து களத்தில் நிற்கிறார். இப்போது சீமானுக்குப் போட்டியாகத்தான் களத்தில் கௌதமன் இறங்குவதாக தகவல்.


என்னாச்சு..? யார் இந்த கௌதமன். உருப்படியாக ஒரே ஒரு படம்கூட எடுக்காத கௌதமன், ஒரே ஒரு உருப்படியான படம் எடுத்த சீமானுடன் மோத இருக்கிறார். இனிமேல் சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் எதுவும் செய்யமுடியாது என்று முடிவானதும் கௌதமன் எடுத்த முடிவுதான் அரசியல் கட்சி.

ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழர்களின் கல்வி உரிமை பறிப்பான நீட்டினை எதிர்த்தும், நெடுவாசல் - கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தும், செம்மரம் வெட்ட சென்றதாக குற்றம்சாட்டி ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட இருபது தமிழர்களுக்காக போராடியும், மீனவர்களுக்காகவும், தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்காகவும் களம் பல கண்டு பல முறை சிறை சென்றவர்.

மக்களுக்கான போராட்டங்களில் நின்று எத்தனையோ வழக்குகளை சந்தித்தாலும் நித்தம் நித்தம் பறிபோய்க்கொண்டிருக்கும் விவசாயிகள் ,மீனவர்கள், மாணவர்களுக்கான உரிமை வேண்டி கிண்டி "கத்திப்பாரா" பாலத்தை பூட்டுப்போட்டு இவர் நடத்திய போராட்டம்தான் இவர் யார் என்று திரும்பி பார்க்க வைத்தது. 

இனி தமிழ் இனத்தை மானமுள்ள ஒரு தமிழன்தான் ஆளவேண்டும். இழந்த உரிமைகளை மீட்பது ஒருபுறமிருந்தாலும் இருக்கின்ற உரிமைகளை காக்கவாவது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். திரும்பிய திசையெல்லாம் ஓலமிட்டு கொண்டிருக்கும் எம் தமிழினத்தின் அவல நிலையை போக்க எங்களின் விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு மட்டும் கூட்டணி வைத்து அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று உறுதியாக சட்டமன்றத்திற்கு செல்வேன்" என நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான வ.கௌதமன்.

விக்கிரவாண்டி தொகுதியில் ஜெயித்துவிட்டால் தமிழினத்தின் அவலத்தை போக்கிவிடுவாரா கௌதமன் என்று நக்கல் செய்கிறார்கள் சீமானின் செல்லத்தம்பிகள். சீமானுக்கும் இவருக்கும் இடையிலான ஒரு கொட்டுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட முட்டல்தான், தனிக்கட்சி வரை போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்னமோப்பா, நல்லா இருந்தா சரிதான்.