புதிய கல்வி கொள்கையில் இனி போதிக்கப் போவது கொள்ளை கல்வியா? கெளதமன் ஆவேசம்..!

தன் தாய்மொழியை காக்க 21 பேர் தொடர்ச்சியாக தீக்குளித்தும் ஏழு நூறுக்கு மேற்பட்டவர்கள் நேர் நின்று நெஞ்சில் குண்டடி தாங்கியும் போராட்ட களத்தில் வீர மரணம் அடைந்த வரலாறு உலகில் உண்டென்றால் அது 1965-ல் எங்கள் தமிழ் மண்ணில் நடந்த இந்தி எதிர்ப்பு போராகத்தான் இருக்கும்.


இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மட்டுமல்ல அறமற்ற முறையில் நீட் எமனை திணித்த போதும் அறிவில் சிறந்த எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் பத்துக்கும் மேற்பட்டோர். நஞ்சருந்தியும், தூக்கிட்டும் தங்கள் உயிரை மாய்த்து இந்திய அதிகார வர்க்கத்திற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அப்படிப்பட்ட இந்தி திணிப்பை விடவும், நீட் எமனை விடவும் ஆயிரம் மடங்கு குரூரமானது புதிய தேசிய கல்விக்கொள்கை திட்டம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் அதனை தாண்டிய ஒரு உக்கிரமான போராட்டத்தை அதிகார வர்க்கங்கள் சந்திக்க வேண்டிவரும் என்று தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ.கெளதமன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

ஒரு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்ற துறை கல்வித்துறை, அந்தத் துறையில் கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு பல நீண்ட விவாதங்களும், சட்ட மன்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர்களும் பல மாதங்கள் இடைவெளியின்றி நடத்தப்பட்டு மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு கல்வியாளர்களால் திருத்தம் மேற்கொண்டு கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு திட்டத்தை, போகிற போக்கில் ஒரு அரசு அறிவித்து விட்டு போகிறதென்றால் இது கல்விக் கொள்கையா?

இனி போதிக்கப் போவது கொள்ளை கல்வியா? என்கிற கேள்விதான் விகாரமாக எழுகிறது. 1968-ல் தேசிய கல்வி கொள்கை முடிவின்படி மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு 

நடைமுறைப்படுத்த எத்தனித்தபோது, அப்போதைய முதல்வராக இருந்த அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் மும்மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்தார். அதன் விளைவாக மும்மொழி திட்டம் கைவிடப்பட்டது. இன்று குறுக்கு வழியில் நவீன முறையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தவே இந்த புதிய கல்விக்கொள்கை முறை.

இக்கல்விக் கொள்கையின் படி “தேசிய கல்வி ஆணையம்“தான் எல்லா முடிவுகளையும் எடுக்கும். மாநில அரசுகள் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டுமேயொழிய தனித்து எந்த முடிவு எடுப்பதையும் புதிய கல்விக் கொள்கை முற்றிலுமாக மறுக்கிறது. மாநில அரசுகளை அடிமையை போல வைத்துக்கொண்டு ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக்(RSA) உயர் அதிகாரத்துடன் இயங்கும்.

ஒருவேளை இப்படிப்பட்ட கொள்கை வரைவுக்கு ஒரு மாநில அரசு ஆதரவு அளித்தால் அதைவிட கொடூரமான செயல் மனித குலத்தில் வேறெதுவும் இருக்காது. கல்வி நிறுவனங்களின் தர நிர்ணயம் முதற்கொண்டு, தனியாருக்கு அனுமதி அளிப்பது வரை அனைத்தையும் தேசிய கல்வி ஆணையமே பார்த்துக்கொள்ளும். இதில் மாநில அரசின் தலையீடே கூடாதென்பது சனநாயக படுகொலைக்கு சமமானது. 

தொழிற்கல்வி பயிற்சி என்கிற பெயரில் குலக்கல்வி முறையையும் புதிய கல்விமுறை தன்னகத்தே கொண்டுள்ளது. பன்னாட்டு கல்வி வணிகத்தை வளர்த்தெடுத்தல், உள்நாட்டில் பரவலாக கல்வியை வியாபாரமாக்கல் இவைதான் இந்த புதிய கொள்கையின் சாரம்சமாக உள்ளது. புதிய கல்விமுறை நடைமுறைக்கு வந்துவிட்டால் இதன் விளைவுகள் இனி வரும் அனைத்து தலைமுறைகளையும் கேள்விக்குறியாக்கி, அவர்களின் கனவுகளை கருவிலேயே கலைத்து, பெரும் சந்தை வணிகமேடாக கல்வித்துறை மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.