ஆம்புலன்ஸ் ஊழியர்களை அரசு மறக்கலாமா..? வேல்முருகன் காட்டம்

முன்னணி களப்போராளிகள், 108 அவசரஊர்தி ஊழியர்கள்! - பண்ருட்டி வேல்முருகன் உருக்கம்.


கொரோனா எதிர்ப்புப் போரில் முன்னணி களப்போராளிகளாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பூதியம் மற்றும் முகக்கவசம், கையுறை போன்ற கொரோனா பாதுகாப்புக் கருவிகளையும் அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ” எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொரோனா வைரசுக்கு எதிராக மனிதகுலம் ஒரு மாபெரும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் போரில் முன்னணியில் நிற்பவர்கள் என்றால் அவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட்ட சுகாதார ஊழியர்கள்தான்.

இந்த சுகாதார ஊழியர்களையும் நோயாளிகளையும் இணைக்கும் பாலமாகப் பணியாற்றுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! இந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசின் கண்களுக்கு எப்படித் தப்பினார்கள் என்று தெரியவில்லை. அதாவது, இந்தக் கொரோனா எதிர்ப்புப் போரில் ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பூதியம் அரசால் அறிவிக்கப்பட்டது;

ஆனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அந்த சிறப்பூதியம் அறிவிக்கப்படவில்லை. அவர்கள் எப்படி விடுபட்டுப் போனார்கள் என்பதும் புலப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பூதியம் மற்றும் முகக்கவசம், கையுறை போன்ற கொரோனா பாதுகாப்புக் கருவிகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது எமது அன்பான வேண்டுகோளாகும்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எனும்போது அதில் அவசர ஊர்தி ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள், அவசர அழைப்பு மைய ஊழியர்கள் ஆகியோரும் அடங்குவர். தமிழகமெங்கும் அவர்கள் 5000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவருமே தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டவர்கள்.

இவர்களுக்கு இதுவரை அதாவது 12 ஆண்டுகளாக ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு போன்றவை கிடையாது என்பதையும் குறிப்பிட வேண்டும். அதற்கெல்லாம் ஆவன செய்ய வேண்டியதும் அரசின் கடமை ஆகும்.

இப்போது கொரோனாவால் 144-ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போக்குவரத்து மற்றும் இதர பணிகள் யாவுமே முடங்கியுள்ளது. அதனால் நோயாளிகள் 108 ஆம்புலன்சில் மட்டுமே செல்ல முடியும். இது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பொறுப்பையும் பணிச்சுமையையும் மேலும் கூட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இத்தகைய நிலையில் பகல்-இரவு, பனி-வாடை, வெயில்-மழை, புயல்-வெள்ளம் பாராது பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இதர சுகாதார ஊழியர்களுக்கு வழங்கியதைப் போல் சிறப்பூதியம் உள்ளிட்ட இன்ன பிறவற்றையும் அரசு வழங்கியிருக்க வேண்டும்; ஆனால் வழங்கப்படவில்லை.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.