அரசு இலவச நீட் பயிற்சி மையம் 413! ஆனால், ஒரே ஒரு மாணவனுக்குத்தான் MBBS சீட்!

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று தமிழர்களின் கதறலை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை.


அனிதாவின் மரணத்தை அடுத்து இந்த ஆண்டு மூன்று மாணவிகள் தற்கொலை செய்து உயிர் விட்டிருக்கிறார்கள்.  இப்படி நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு இலவச நீட் மையங்கள் நடத்தி பயிற்சி கொடுத்தார்கள். ஆனால், அந்த பயிற்சியினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.

ஆம், தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் நடத்தப்பட்ட 413 இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 19,680 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய 19,680 மாணவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 1333 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 2000 ஆக தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், தேர்ச்சி பெற்ற 2000 மாணவர்களில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 400 மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும், 5 மாணவர்கள் மட்டுமே 300 முதல்- 400 வரையும் பெற்றுள்ளனர். அதே வேளையில்,  தனியார் பள்ளிகளில் பயின்ற 5,634 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி நீட் தேர்வில் அதிக மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்றுள்ளதால் கட்- ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ளது.

இதனால் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர வாய்ப்பு இருக்காது என்று மருத்துவக்கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிக பட்சம் ஒரே ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம், அல்லது அதுவும் கிடைக்காமல் போகலாம் என்பதுதான் உண்மையான நிலைமை. கடந்த ஆண்டு அரசின் இலவச நீட் பயிற்சி பெற்ற 7 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.