மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி வெளியேற்றம்! நடுரோட்டில் பிரசவமான அவலம்! அதிர வைக்கும் காரணம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு பெண்ணின் கணவனால் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் சாலையில் குழந்தையை பிரசவித்தார்.


ஆக்ராவை அடுத்த லக்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சிங். இவரது மனைவி நய்னா தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஆக்ராவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துவந்தார். ஆனால் அங்கு பணியில் இருந்த செவிலியரான சரிதா சிங், நய்னா தேவியை அனுமதிக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்த ஷியாம் சிங்கையும், நய்னாதேவியையும் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்து என்ன செய்வது என புரியாமல் தவித்த ஷியாம் சிங், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சாலையில் நடக்கத் தொடங்கினார்.

சிறிது தூரம் செல்வதற்குள்ளாகவே நய்னா தேவிக்கு பிரசவ வலி அதிகரித்து துடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சாலையில் சென்ற சில பெண்களின் உதவியுடன் சாலையிலேயெ பிரசவித்த அவர் ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார்.  

இந்த விவகாரம் விரைவிலேயே ஆக்ரா மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்ததை அடுத்து செவிலியர் சரிதா சிங் பணி நீக்கம் செய்யப்பட்டார். மருத்துவர் சுப்ரியா ஜெயின், மருந்தாளுநர் சோனு கோயல் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பிணம் தின்னிக் கழுகுகள் போன்று லஞ்சமாக பணத்தை சுரண்ட அரிப்பெடுத்துத் திரிந்த அரசு மருத்துவமனை ஊழியர்களின் இழி செயலால் பெண் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த விவகாரம் அனைவரையும் முகம் சுழிக்கச் செய்துள்ளது.