அரசுக்கு எதிராகப் போராடிய அரசு மருத்துவர் சங்கத் தலைவர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

அரசு மருத்துவக் கட்டமைப்பைப் பாதுகாக்கக் கோரி போராடிவந்த டாக்டர் இலட்சுமி நரசிம்மன் சேலத்தில் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.


அவருக்கு வயது 50. அரசு மருத்துவத் துறையைத் தனியார்மயமாக்கும் கூட்டு முயற்சிகள் அண்மையாக மேற்கொள்ளப்பட்டன. அதை எதிர்த்தும் அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டபடி ஊதியத்தை வழங்கவேண்டும் என்பன அடங்கலான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தில் முன்னணியில் நின்று பணியாற்றியவர்.

பேராசிரியர் பணிநிலையில் இருந்தாலும் இளநிலை மருத்துவர்களோடு அரவணைப்பாக சங்கப் பணியாற்றி நற்பெயர் எடுத்தவர்.அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவமாணவர்கள் அமைப்பின் தலைவராக இருந்த பேரா. இலட்சுமி நரசிம்மன், எட்டு நாள் தொடர் போராட்டத்தின் காரணமாக, அரசின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளானார்.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய அவரை, இராமநாதபுரத்துக்கு தூக்கியடித்தது, அரசாங்கம். இவருடன் சேர்த்து மொத்தம் இடமாற்றம்செய்யப்பட்ட 100- அரசு மருத்துவர்களின் இடமாற்றம் ரத்துசெய்யப்படாமலேயே இருக்கிறது. அதை எதிர்த்த நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். கடந்த நவம்பரில் தன்னுடைய அமைப்பினருக்கு இது தொடர்பாக நம்பிக்கையூட்டும் படியான கருத்தைத் தெரிவித்திருந்தார்.