நல்ல காத்தடிக்குது, நல்ல மழை பெய்யுது! அப்படின்னா தமிழனுக்கு நல்ல காலமா?

நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது ஆடிக்காற்று அற்புதமாய் வீசுகிறது.


ஆடிக் காற்று நன்றாக வீசினால், அடுத்து நல்ல மழை இருக்கும் என்பது நிச்சயம். இதனை நிரூபிப்பது போன்று இப்போதே கொங்கு மண்டலம் மற்றும் கர்நாடகப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.

இப்போது கர்நாடகத்தில் மழை பொழிந்து காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், இதனை தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. ஆனால், நல்ல மழைப் பொழிவு இருக்கும்போது, இதனை உடனே தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சொல்வதற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு செயல்படவில்லை என்பதுதான் வேதனை.

கர்நாடக அணை நிரம்பிய பிறகுதான் தண்ணீர் நமக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அணை நிரம்பிய பிறகு தண்ணீர் தமிழகத்திற்கு தானாகவே வந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாத காவிரி ஆணையத்தால் என்ன நன்மை வந்துவிடப் போகிறதோ?

மனிதர்கள் தடுக்க நினைத்தாலும், இயற்கை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணைக்கு போதுமான அளவுக்கு நீர் வந்துவிடும். அதன்பிறகு காவிரியில் நீர் திறக்கவும் வாய்ப்பு உண்டு.

காவிரியில் தண்ணீர் திறந்தால் டெல்டா வரையிலும் செழிப்பு ஏற்படும். இப்போதே அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசும் விவசாயிகளும் செய்வது நல்லது. யார் என்ன சொன்னாலும், இயற்கை தமிழர்களை கைவிடவில்லை என்பதுதான் ஆறுதல்.