ஞாபக சக்தியில் தெறிக்கவிடும் நியுஸ் ரீடர் ஹேமாவின் பேபி ஆத்மிகா! என்னென்ன செய்கிறார் தெரியுமா?

ஞாபக திறனில் நம்மை அசறடிக்கும் சாதனை குழந்தை ஆத்மிகா.


உலகில் உள்ள செல்வங்களில் சிறந்த செல்வம் மழலைச் செல்வம் தான். குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமானவர்கள் தான். அதுவும் மழலை மொழியில் குழந்தைகள் பேசும் போது மனதில் உள்ள பாரங்கள் லேசாகி புது உற்சாகம் பிறப்பதை யாராலும் தடுக்க முடியாது. 

அப்படி ஒரு குழந்தை தான் ஆத்மிகா. சென்னையில் வசிப்பவர்கள் ராக்கேஷ்- ஹேமா தம்பதியினர். ராக்கேஷ் தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். ஹேமா ராக்கேஷ் தனியார் தொலைக்காட்சியில் இணைய ஆசிரியர் மற்றும் தொகுப்பாளராக பணிபுரிகிறார்.

இவர்களுடைய குழந்தை ஆத்மிகாவிற்கு ஒன்றே முக்கால் வயதாகிறது. 6 மாதத்தில் இருந்தே புத்தகத்தில் உள்ள படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டிய ஆத்மிகா, இப்போது சுட்டி குழந்தையாக பல்வேறு விவரங்களை சொல்கிறார். அதுவும் அழகு தமிழில் நிலா நிலா ஓடிவா பாடல், குத்தடி குத்தடி கண்ணமா, தோசை அம்மா தோசை என்று மழலை மொழியில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.

அதே போல உடல் பாகங்கள் பெயர் சொன்னால் அவற்றை சரியாக பொறுத்தி சொல்கிறார். நாட்கள் , கிழமைகள், தமிழ் வருடங்கள், ஆங்கில வருடங்கள் என அடுக்கடுக்காக பெயர்களை சொல்லி அசத்தி வருகிறார் ஆத்மிகா. அம்மா இங்கே வா, ஆசை முத்தம் தா, இலையில் சோறு போட்டு என்று ஆத்திச்சூடியும் பாடுகிறார்.

ராக்கேஷ்- ஹேமா தம்பதி வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரு மினி ப்ளே ஸ்கூலில் நுழைவது போல் உள்ளது. ஹால் .முழுவதும் படங்கள் தொங்கி கிடக்கிறது. பறவைகள், பழங்கள், விலங்குகள், வாகன்ங்கள் என வரிசையாய் மாட்டிவைத்துள்ள படங்களில் உள்ள பெயர்களை சொன்னால் ஆத்மிகா அவற்றை சரியாக கை காட்டுகிறார்.

அதோடு மற்றொரு ஆச்சர்யம், நம் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநில முதல் அமைச்சர்களின் பெயர்கள் என வரிசையாக சொல்கிறார். மேலும் மருத்துவர், பொறியாளர், டிரைவர் என 25 க்கும் மேற்பட்ட பெயர்களை படம் பார்த்து சொல்வதோடு 2 திருக்குறள்களையும் சொல்கிறார்.

மேலும் ஏபிசிடி பெயரின் வார்த்தைகள், எண்கள் ஒன்று முதல் 20 வரை என அவளின் மழலை மொழி இனிதாக இருக்கிறது. காலை 1 மணி நேரம் மற்றும் மாலை 1 மணி நேரம் புத்தகங்களை கையில் எடுத்து அழகாக படிக்கும் ஆத்மிகாவிற்கு தினமும் அவரின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அழகாக வார்த்தைகளை விளையாட்டு வாக்கில் சொல்லி கொடுக்க அதை அப்படியே மனதில் பதிய வைத்து திரும்ப சொல்கிறார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக இருக்கிறது ஹேமாராக்கேஷ் குடும்பம். மேலும் புத்தகங்கள் படித்து அறிவார்ந்த ஆளுமையாய் ஆத்மிகா வளர்வாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.