பாப்பாத்தி இல்லேன்னா கோமதி இல்ல! இந்தியாவுக்குத் தங்கமும் இல்ல! யார் அந்த பாப்பாத்தி.!

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தடகளப் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் கடைசி ஒரு நிமிடத்தில்தான் தன்னுடைய உத்வேகத்தைக் காட்டினார் கோமதி. அது வரையில், தோற்கப்போவர் போன்ற சீராக நான்காவது, மூன்றாவது இடத்தில்தான் ஓடிக்கொண்டு இருந்தார். கடைசி ஒரு நிமிடத்தில் வேகமெடுத்த கோமதி, சட்டென தங்கத்தை வென்று இந்தியக் கொடியை உயரப் பிடித்துவிட்டார்.


30 வயதில் தங்கம் வென்ற கோமதி, தன்னுடைய வெற்றிக்குக் காரணம் என்று பலரை குறிப்பிட்டாலும், அதில் முக்கியமானவர் பாப்பாத்தி. அவர் சென்னை, மயிலாப்பூர் போக்குவரத்து காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார் என்பதுதான் பெருத்த ஆச்சர்யம்.. இவர் பெயர் பிரான்சிஸ் மேரி.

பாப்பாத்திக்கும் கோமதிக்கும் என்ன தொடர்பு?  பாப்பாத்தியும் ஓட்டப் பந்தய வீராங்கனை. இருவரும் கடந்த 2009ம் ஆண்டு ஒரு போட்டியின் போது அறிமுகமாகியிருக்கிறார்கள்.. அப்போது கோமதியிடம் திறமையைத் தாண்டித் தெரிந்த அப்பாவித்தனத்தால் கவரப் பட்டிருக்கிறார் பாப்பாத்தி. இத்தனை அப்பாவியாக இருக்கும் கோமதியால் எப்படி சர்ச்சைகளும், குழிபறிப்புகளும் நிறைந்த இந்தத் துறையில் ஜெயிக்க முடியுமோ என்ற அச்சத்தால் அவளுக்கு உதவத் தொடங்கியிருக்கிறார்.

இந்த சூழலில் ஒரு விபத்து காரணமாக மேரியால் ஓட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து விளையாட்டு பிரிவில் போலீஸ் வேலையில் சேர்ந்துவிட்டார். அப்போது மேரிக்கு ஏற்பட்டது போலவே கோமதிக்கும் ஒரு விபத்து நடந்திருக்கிறது. அந்த சூழலை சமாளிக்க முடியாமல் அழுது புலம்பியவருக்கு  நம்பிக்கை கொடுத்து, மீண்டும் ஓடுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் மேரி.

கோமதி பதக்கம் பெறுவாள் என்ற நம்பிக்கை, அவளைவிட எனக்கு அதிகம் உண்டு என்று சொல்லும் மேரி, தன்னுடைய சகோதரர் பிரான்சிஸிடம்   பயிற்சி எடுத்துக்கொள்ள உதவி செய்திருக்கிறார். அந்த உதவிதான் கோமதிக்கு இன்று தங்கம் வெல்ல உதவியிருக்கிறது.

ஆனால், இப்போதும் அடக்கமாக, ‘ கோமதியின் வெற்றிக்குக் காரணம் அவரின் கடும் உழைப்பு மட்டும்தான்.” என்கிறார் பாப்பாத்தி என்ற மேரி. எழைகள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்பது இவர்கள் விஷயத்தில் உறுதியாகியிருக்கிறது. கோமதியை மட்டுமின்றி பாப்பாத்தியையும் பாராட்டுவோம்.