1 வாரத்திற்குள் ரூ.1500 உயர்வு! 1 பவுன் ரூ.28 ஆயிரத்தை கடந்தது! தங்கம் விலை கிடுகிடுவென உயர காரணம் என்ன தெரியுமா?

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயரத் தொடங்கியுள்ளது இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது.


கடந்த சில மாதங்களாகவே சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சத்தை தொட்டுள்ளது. இதே போல் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது. சீனாவின் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க சுமார் 10 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இந்த காரணங்களால் உலக அரங்கில் தொழில் துறை கடும் ஆட்டத்தை கண்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான தொழிலில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். குறிப்பாக தங்கத்தின் மீது கடந்த வாரம் முதலீடு அதிகரித்தது. உலக அளவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் கூட வழக்கத்தை விட தங்கத்திற்கான தேவை அதிகமானது. உலக அரங்கில் தங்கத்தின் விலையில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சுமார் இரண்டரை சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. இதே கால கட்டத்தில் இந்தியாவிலும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை அதிகப்படுத்தினர். மேலும் சிலர் தங்கத்தை கட்டிகளாக வாங்கி வைக்க ஆரம்பித்தனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது. சிறு குறு தங்க விற்பனையாளர்கள் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் தங்கம் விற்பனை சுமார் 13 விழுக்காடு அதிகரித்தது.

இதன் மூலம் உலக அளவில் தங்க இறக்குமதியில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்தது. இப்படி ஏற்கனவே தங்கம் மீதான இந்தியர்கள் மோகம் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீட்டை அதிகரிக்க துவங்கியுள்ளனர்.

இதன் காரணமாக தேவை அதிகரித்ததன் காரணமாக தங்கம் விலை இரண்டே நாளில் சுமார் 900 ரூபாய் வரை சவரனுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விரை சவரன் 30 ஆயிரம் ரூபாயை தொடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தங்கம் வாங்க இது சாதகமான காலகட்டம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.