பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகனின் புற்று நோயை குணப்படுத்த சென்ற இளம் பெண்! சாமியார் செய்த தகாத செயல்!

டிராம்பேயைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அவர்கள் அந்தச் சிறுவனை ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுவனின் தாய் ஒரு கோவிலில் உள்ள ஒரு சாமியாரைச் சந்தித்து தங்கள் துயரை எடுத்துக் கூறினார். பூஜைகள் மூலம் சிறுவனை நலம் பெறச் செய்வதாகத் தெரிவித்த அந்த நபர் அவர்கள் வீட்டுக்கு வந்து யாகம்செய்ததாகவும் யாக சாம்பலை அந்தப் பெண்ணுக்கும் சிறுவனுக்கும் சாப்பிடக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதைச் சாப்பிட்டவுடன் இருவரும் மயங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரும் அங்கிருந்த சாமியார் சிறுவனின் நோயை குணப்படுத்திவிட்டதாகவும் எதுவும் நேராது என்றும் கூறி பெண்ணின் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து மகனின் உடல் நிலையில் சில கோளாறுகள் இருப்பதாகவும் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறி அந்தேரியில் உள்ள தனது குடியிருப்புக்கு பெண்ணை வரவழைத்த சாமியார் அங்கு பூஜையின் ஒரு பகுதி எனக் கூறி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி அவ்வப்போது அந்தப் பெண்ணிடம் அத்து மீறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்தப் பெண்ணின் கணவரையும் விட்டு வைக்காத அந்த நபர் சிறுவனின் உடல் நலம் குறித்த பூஜைக்கு எனக் கூறி சுமார் 3 லட்சம் ரூபாய் பணம் பிடுங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனை சிகிச்சையும் பலனின்றி வழிபாடும் பலனின்றி அந்தச் சிறுவன் கடந்த ஆண்டு உயிரிழந்தான். ஆனால் அந்தப் பெண் மீதான சாமியாரின் பாலியல் வன்கொடூமை மட்டூம் தொடர்ந்த நிலையில் பொறுக்க முடியாத அந்தப் பெண் தன் கணவரிடம் நடந்ததைக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்தத் தம்பதிகள் அளித்த புகாரின் பேரில் சாமியார் மீது பாலியல் பலாத்காரம், பணம் பறித்தல், குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் , அந்த சாமியார் உஜ்ஜைனியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு தனிப்படையை அனுப்பியுள்ளனர்.