கோதாவரி - காவிரி இணைப்பு! மோடி அரசின் திடீர் ஆர்வம் ஏன்? பரபரப்பு தகவல்!

கோதாவரி-கிருஷ்ணா-பென்னார் - காவிரி ஆறுகள் இணைக்கப்படும் என்றும் இதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை தீர்க்கப்படும் என்றும் பாஜகவின் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனை குறிப்பிட்டு பாஜக தலைமை உட்பட சங்கிகள் அனைவரும், தமிழகம் பாஜகவை புறக்கணித்தாலும், பாஜக தமிழகத்தை புறக்கணிக்காது என்ற ரீதியில் பேசி வருகின்றனர். உண்மையில் இந்த திட்டத்தின் மூலம் பாஜகவின் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை இழைக்க போகிறது என்பது தான் உண்மை.


காவிரியில் இனி தமிழகத்திற்கு  தண்ணீர் கிடைக்கப் போவதில்லை என்பதை தான் நிதின் கட்கரி மறைமுகமாக கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடகா மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் (கவனிக்க: இது காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்த சொன்ன, தன்னிச்சையாக இயங்க கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அல்ல. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆணையம்) பரிந்துரை அடிப்படையில் அணை கட்டுவதற்கான அனுமதியையும் வழங்கும். மாறாக, ஆறுகள் இணைப்பின் மூலம் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும் என்று அறிவிக்கும். பாஜகவின் பினாமி எடப்பாடி அரசு, எப்படி வாரியத்திற்கு பதிலாக ஆணையத்தை ஏற்றுக்கொண்டதோ, அதே போல் இதையும் ஏற்றுக் கொள்ளும்.

கடந்த 2018 டிசம்பர் மாதம் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது நம் நினைவில் இருக்கும். அடுத்ததாக இது சட்டமாக்கப்படும். இதன்படி பெரிய அணைகள் அனைத்தும் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். மேலும், ஆறுகள் இணைக்கப்படுவதால், மாநில அரசுகளுக்கு சொந்தமான இந்த ஆறுகள் ஒன்றிய அரசிற்கு சொந்தமாகவிடும். அதன்படி, கபினி, கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைகள் மீதான உரிமை கர்நாடக-தமிழக அரசுகளிடமிருந்து பிடுங்கப்படும். கிருஷ்ணா கோதாவரியில் வெள்ளம் ஏற்பட்டால் அவை தமிழகத்திற்கு திருப்பிவிடப்படலாம். ஆனால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால்? தமிழகம் அப்படிப்பட்ட வெள்ளத்தை இனி காணப்போவதில்லை. அதற்கு தான் மேகதாது அணை.

தமிழகத்தில் பாஜக அடைந்த தோல்விக்கு பழிவாங்கும் விதமாகவும், கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றிக்கு நன்றியாகவும் என்பதை தாண்டி, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி படுகைகளில் ஹைட்ரோகார்பன் (எண்ணெய், மீத்தேன் உட்பட அனைத்து இயற்கை வளங்கள்) எடுக்கும் திட்டங்களை அம்பானி, அதானி, வேதாந்தா நிறுவனங்களுக்கு வழங்கிட எடுக்கப்பட்டுள்ள முதல் நடவடிக்கை இது. ஆற்றுப் படுகையில் ஆற்று நீர் செல்வது தடுக்கப்பட்டால், கார்ப்பரேட் நிறுவனங்கள் எண்ணெய், மீத்தேன் போன்ற இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. மேலும் தண்ணீரை தனியார்மயமாக்குவதற்கு வசதியாகவும் இருக்கும்.

இது பொருளாதார காரணம் என்றால், ஆறுகள் இணைக்கப்படுவதால் ஏற்படும் சூழலியல் பிரச்சனைகள் அநேகம். மீன்வளம் அழிந்து போகும் என்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். நிலத்தடியில் கடலின் உப்பு நீர் உள்வாங்கும். இணைப்பு கால்வாய்கள் காரணமாக காடுகள், மலைகள் அழிக்கப்பட்டு அதன் தாதுவளங்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதனால் காடு மலைகளை நம்பி வாழும் பழங்குடிகள் வாழ்வு அழிக்கப்படும். மேலும் எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை சுத்திகரிக்க, பெட்ரோலிய மண்டலங்கள் அமைக்கப்பட்டு, அவை கெயில் நிறுவன குழாய்கள் மூலம் எடுத்து செல்லப்படும். மேலும் டேங்கர் லாரிகள் செல்லும் விதமாக 6/8 வழி சாலைகள் உருவாக்கப் படும். சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டமும் இதனோடு தொடர்புடையவை தான். இந்த திட்டங்கள் மூலம் கிழக்கு தொடர்ச்சி மலைகள் அனைத்தும் அழிக்கப்படும். இதனால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் காரணமாக மழை பெய்வது சுத்தமாக நின்று போகும் (கடலில் கலக்கும் நன்னீர் தான் ஆவியாகி மழையாக பொழிகிறது என்று பள்ளிப் பாடத்திலேயே சொல்லிக் தரப் படுகிறது).

மற்றொரு முக்கிய பின்னணி, அடுத்து பாஜக நடத்தவிருக்கும் ரஜினியின் அரசியல் பிரவேசம். காவிரி பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காக, ஆறுகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது ரஜினியின் 25 ஆண்டுகால கோரிக்கை. இதற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக (இன்னும் தரவில்லை) கூறியது நினைவுகூற வேண்டும். இப்போது இத்திட்டத்தை அறிவிப்பதன் மூலம் ரஜினியின் கோரிக்கை நிறைவேற்றபடுகிறது என்று பிரச்சாரம் செய்யப்படும். இது ரஜினியின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் என்பதே பாஜக போடும் கணக்கு. ஆக மொத்தம், தமிழகம் இனப்படுகொலையை சந்திக்கப்போகிறது என்பதே உண்மை.