சிறுமியிடம் அத்துமீறிய நீச்சல் பயிற்சியாளர்! 12 தங்கப்பதக்கம் வாங்கியவர் செய்கிற காரியமா இது..?

கோவா மாநிலத்தில் நீச்சல் அணியின் மாநிலத் தலைமை பயிற்சியாளர் 15 வயது சிறுமியிடம் அத்துமீறும் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவாவில் நீச்சல் அணியின் மாநிலத் தலைமை பயிற்சியாளரான சுரஜித் கங்குலி 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை சிக்க வைக்க முன்கூட்டியே ஒரு அறையில் செல்போனை வைத்து அவர் அத்துமீறும் காட்சிகளை படம் பிடித்து பின்னர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து மத்திய அமைச்சர் கங்குலி மீது விளையாட்டு ஆணையம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். கோவா நீச்சல் சங்கமும் சுரஜித் கங்குலியின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சூரஜித் கங்குலி தகாத முறையில் நடந்து கொண்டதாக மாணவி போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து நீச்சல் பயிற்சியாளர் சுரஜித் கங்குலி மீது காவல்துறை போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது. இதையடுத்து டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் சுரஜித் கங்குலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுரஜித் கங்குலி மீது புகார் வந்தவுடன் அவரை நீக்கிவிட்டதாக இந்திய நீச்சல் சம்மேளனமும், கோவா நீச்சல் சங்க அதிகாரிகளும் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சுரஜித் கங்குலி மீது எந்த புகாரும் வந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசப் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள சுரஜித் கங்குலி 1984-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதலாவது பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.