சரண் அடையுங்கள் சிதம்பரம்! இத்தனை பெரிய தலைவரான நீங்கள் இப்படி சட்டத்துக்குப் பயந்து ஓடி ஒளியலாமா?

உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் போன்ற மாபெரும் பதவிகளுக்கு அடையாளம் கொடுத்தவர் சிதம்பரம்.


உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்திய பொருளாதார மாமாதை. சட்டப் புலி. எல்லாம் சரிதான். ஆனால், தேடப்படும் குற்றவாளியாக சிதம்பரத்தை அறிவித்து அசிங்கப்படுத்தி வருகிறது சி.பி.ஐ. 

இது முழுக்க முழுக்க அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்பது அகில இந்தியாவுக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், சந்தித்துத்தான் ஆகவேண்டும். அதுதான் அரசியல் விதி.

முன்பு சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது அமித்ஷாவை சிறையில் தள்ளி வேடிக்கை பார்த்ததற்கு பழி வாங்கப் பார்க்கிறார் என்று சொல்லப்படுவது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும், இன்றைய குற்றசாட்டுகள் நிஜம்.

2 ஜி உள்ளிட்ட அரசியல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலைபெற்று நின்றதில்லை என்பது உறுதியாகவே தெரிகிறது. அதன்பிறகும் சில இப்படி ஓடி ஒளிந்து மறைந்து விளையாடுவது சிதம்பரத்திற்கு சரியாகத் தெரிகிறதா? வெள்ளிக்கிழமைதான் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது? ப.சிதம்பரத்தின் டிரைவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மனது வைத்தால் சில மணி நேரங்களில் சி.பி.ஐ. கைதுசெய்து அவமானப்படுத்திவிடும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதனால், நீங்களாகவே சரண் அடைந்துவிடுங்கள் சிதம்பரம். அதுதான் நீதித்துறைக்கு நீங்கள் காட்ட வேண்டிய மரியாதை.