கழிப்பறை கட்டமுடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண்! இதுதான் தூய்மை இந்தியாவா..?

வீட்டில் கழிவறை கட்டித் தருமாறு பலமுறை கணவனிடம் கேட்டும் கோரிக்கையை அவர் நிராகரித்ததால் நெல்லை மாவட்டத்தில் பெண் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.


நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த சிதம்பரபுரத்தில் ஷாலினி சசிகுமார் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. 

திருமணம் ஆன நாளில் இருந்தே வீட்டில் கழிவறை கட்டித் தர வேண்டும் என கணவர் சசிக்குமாரிடம் ஷாலினி வற்புறுத்தி வந்துள்ளார். 7 ஆண்டுகளாக கழிவறை கட்டித் தராத ஒரே காரணத்திற்காக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.

கடந்த ஞாயிறன்று இதே பிரச்சனைக்காக வீட்டில் சண்டை வெடித்ததால் வாக்குவாதம் முற்றியதில் மனமுடைந்த ஷாலினி தனது அறைக்குள் சென்று தூக்குப் போட்டுக் கொண்டு தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதை நம்பாத பெண்ணின் வீட்டார் தங்களது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், கணவரும் மாமனாரும் சேர்ந்து ஷாலினியை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் போலீசில்புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப் பதிந்த போலீசார் கணவர், மாமனாரை விசாரித்து வருகின்றனர்.

பொதுவாக கிராமப்புறங்களில் உடல் உபாதைகள் கழிக்க திறந்த வெளியையும், ஏரிகளையும் தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவர். அதற்குக் காரணம் கழிவறை கட்டுவதற்கும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும் போதுமான வசதி இல்லாதே.

இந்த பிரச்சனையை போக்க மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி கிராமங்கள்தோறும் கழிப்பறை கட்ட மானியம் வழங்கி வருகிறது.

திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், நோய்த்தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட அரசு 12,000 ரூபாய் மானியம் வழங்குகிறது.

காலைக் கடனைக் கழிக்க அதிகாலை இருட்டில் ஆபத்தான, சுகாதாரமற்ற புதர் பகுதிகளைத் தேடி ஓடும் கிராமப்புற பெண்களின் வெளியே சொல்ல முடியாத மனவலி இன்றும் பல கிராமங்களில் நிலவுகிறது.

ஆரோக்கியமான உடலும் சுற்றமும் மட்டுமே நிரந்தரமான, நிம்மதியான வாழ்க்கையை பரிசளிக்கும். வீட்டில் மற்ற அறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கழிவறைக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்