திடீர் விபத்து! கைகளை இழந்த இளம் பெண்ணுக்கு ஆண் ஒருவரின் கைகளை பொருத்திய மருத்துவர்கள்! ஆனால் எதிர்பாராமல் நிகழ்ந்த அற்புதம்!

பெங்களூரு: விபத்தில் கைகளை இழந்த பெண், தனக்குப் பொருத்தப்பட்ட ஆண் ஒருவரின் கைகளுடன் நடமாடி வருகிறார்.


கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தனாகவுடர். 18 வயதான இவர், பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி, 2 கைகளையும் இழந்தார். கைகள் இன்றி வேதனைப்பட்டு வந்த சித்தனாகவுடருக்கு, உறுப்பு தானம் செய்ய கோரி அவரது குடும்பத்தினர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் பலனாக, இறந்துபோன ஆண் ஒருவரின் 2 கைகளை தானமாக வழங்க, ஒரு குடும்பத்தினர் முன்வந்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த கைகள் சித்தனாவின் உடலுக்கு பொருத்தமின்றி பெரியதாக, மயிர்கள் அடர்ந்ததாக, முரட்டுத்தனமாக இருந்தன.  எனினும், கை மிக தேவை என்பதால் மகிழ்ச்சியுடன் அந்த கைகளை சித்தனா ஏற்றுக்கொண்டார். பிறகு, அவருக்கு 13 மணி நேரம் போராடி, மருத்துவர்கள் வெற்றிகரமாக மாற்று கைகளை பொருத்தினர். அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் சித்தனா, புதிய கைகளால் தனது அன்றாட பணிகளை படிப்படியாக செய்ய தொடங்கினார்.

அப்போது ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஆம்,  புதியதாக பொருத்தப்பட்ட கைகள், சித்தனாவின் உடலுக்கு ஏற்ப, சிவப்பு நிறமாக மாறியதோடு, படிப்படியாக முரட்டுத்தனத்தை இழந்து, மென்மையாகவும் மாறிவிட்டன. கைகளில் இருந்த அடர்ந்த மயிர்கள் உதிர்ந்தும் போயின. இதனைக் கண்டு  சித்தனா பெரும் வியப்படைந்தார். இதுபற்றி மருத்துவர்களிடமும் அவர் பரிசோதனை செய்துகொண்டார்.  

இதுபோன்ற சம்பவம் நிகழ்வது சற்று அரிதான விசயம்தான் எனக் குறிப்பிடும் மருத்துவர்கள், தங்களது அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, புதியதாக பொருத்தப்பட்ட கைகளை வைத்து, தனது கல்லூரி தேர்வுகளையும்  சமீபத்தில் எழுதி முடித்துள்ளார்.