காதலன் முகத்தில் ஆசிட் காயம்! ஆனாலும் கல்யாணத்துக்கு ஓகே சொன்ன காதலி! பட் ஒரு ட்விஸ்ட்!

டெல்லியில் 3 ஆண்டு காதலை முறித்துக்கொள்ள விரும்பிய காதலனை வழிக்கு கொண்டு வந்து திருமணம் செய்துகொள்ள அவரது முகத்தில் ஆசிட் வீசிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.


டெல்லியின் விகாஸ்புரியில் ஒரு காதல் ஜோடி மீது ஆசிட் வீசப்பட்டதாக் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காதலர்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியதாகவும் இதில் காதலன் முகம் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து  அந்த காதல் ஜோடி இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வட்டாரங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் எவரும் அவர்கள் மீது ஆசிட் வீசிய காட்சிகள் எதுவுமே பதிவாகவில்லை.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த ஆணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது தன் மீது தனது காதலி தான் ஆசிட் வீசியதாக அவர் தெரிவித்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனது காதலி தன்னை ஹெல்மெட்டை கழற்ற கட்டாயப்படுத்தியதாகவும், கழற்றிய  போது தனது பர்சில் இருந்து சிறிய ஆசிட் குப்பியை திறந்து முகத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்தப்  பெண் அழுகைக்கிடையே உண்மைகளை ஒப்புக்கொண்டார்.

தங்களது 3 ஆண்டுக் காதலை தனது காதலன் முறித்துக்கொள்ள விரும்பியதாகவும், ஆனால் காதலனை திருமணம் செய்துகொள்ள விரும்பிய தான் அவரது முக அழகை சிதைத்தால் தான் அவர் தன் கட்டுப்பாட்டில் இருப்பார் எனத் திட்டமிட்டு வீட்டைச் சுத்தப்படுத்தும் ஆசிட்டை பாட்டிலில் எடுத்து வந்து அவரது முகத்தில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.