காதல் வலையில் விழுந்த மகள்! காதலனின் தந்தையை கொடூரமாக கொன்ற வக்கீல்! கரூர் பரபரப்பு!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இளைஞர் தனது காதலை கைவிட மறுத்ததால் அவரது தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற பெண்ணின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.


குளித்தலையை அடுத்த கம்மநல்லூரைச் சேர்ந்தவர் வாழைக்காய் வியாபாரி பரமசிவம். இவரது மகன்  மணிவண்ணன் கரூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த வழக்கறிஞரான பிச்சைமுத்துவின் 17 வயது மகளை காதலித்து வந்ததாகவும், அதற்கு பிச்சைமுத்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் காதலர்கள் தொடர்ந்து சந்தித்து வந்தது பிச்சை முத்துவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சை முத்து தனது தம்பியும் டெய்லருமான முருகானந்தத்தை அழைத்துக்கொண்டு பரமசிவத்தின் வீட்டுக்குச் சென்றார்.

இங்கு இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த பிச்சைமுத்துவும், முருகானந்தமும் பரமசிவத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த மணிவண்ணனையும் வெட்டி விட்டு அவர்கள் தப்பி ஓடினர். 

தலையில் பலத்த காயம் அடைந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி குளித்தலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், மணிவண்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாகியுள்ள பிச்சைமுத்துவையும் முருகானந்தத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.