அண்ணா அறிவாலயத்தில் கோடி கோடியாக பரிசுப் பணம்! ஸ்டாலினை கை காட்டும் புதிய புகார்!

சென்னை: அதிமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், கட்சியின் வழக்கறிஞர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து திமுக, ஸ்டாலின், துரைமுருகன், தயாநிதி மாறன், தினகரன் ஆகியோர் மீது இன்று ஆறு புகார் மனுக்களை கொடுத்தார்.


ஆறு புகார் மனுக்களிலும் உள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்: 

1. துரைமுருகனுக்கு, சொந்தமான பல்வேறு இடங்களில் வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் தனக்கு சொந்தமானது இல்லை என தெரிவித்திருந்தார். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட பணங்கள் அனைத்தும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் அவை அனைத்தும் தொடர் சீரியல் எண்ணை கொண்டது. எனவே அந்த எண்களின் அடிப்படையில் அவை ரிசர்வ் வங்கியில் இருந்து எந்த வங்கியின் செஸ்ட்டிற்கு அனுப்பப்பட்டது அங்கிருந்து எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது, அங்கிருந்து எந்த நபரின் கணக்கிற்கு அனுப்பப்பட்டது என்பதை காவல் துறையின் மூலம் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட நபரின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். 

2. உயர் நீதிமன்ற வழிகாட்டும் நெறிமுறைகளை மீறும் விதமாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் விதமாகவும் கடும் வெயிலில் பொதுமக்களை கொடுமை படுத்தும் விதமாக அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தராமல் நடத்தும் கூட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமீறலின் அடிப்படையிலும், நீதிமன்ற அவமதிப்பின் அடிப்டையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

3. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு பறக்கும் படை சோதனை செய்து அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

4. மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தன்னுடைய நிறுவனத்திற்கு சொந்தமான ஓளிபரப்பு வாகனத்தில் பணத்தை கொண்டு சென்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்துகொண்டிருக்கிறார். அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

5. தமிழ்நாடு அரசின் 108 அவசர ஊர்தியின் மாதிரியாக வண்டிகள் தயார் செய்து அதில் தமிழகம் முழுவதும் பணம் கொண்டு செல்லக்கூடிய முயற்ச்சியை திமுக முன்னெடுக்க இருக்கிறது. அதை கண்காணித்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களின் எண்களை பறக்கும் படைக்கு கொடுத்து அந்த பட்டியலில் இல்லாத அவசர ஊர்தி மாடலில் செல்லக்கூடிய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

6. தினகரனுக்கு வழங்கப்பட்ட சின்னத்தில் அவர்கள் பெட்டிபோன்று செய்து அதன் உள் பரிசு பொருட்களை வைத்து வாக்காளர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள், அதை தடுத்து நிறுத்தி அவர்களின் சின்னத்தை அட்டையில் வரைந்து பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும். 

ஆறு புகார் மனுக்களை அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் வழங்கியுள்ளார். பின்னர் செய்தியிளர்களை சந்தித்த அவர் தேர்தல் ஆணையர் அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறினார்.