டெல்லி: சூரிய கிரகணத்தைப் பார்க்க விலை உயர்ந்த கண்ணாடி பயன்படுத்திய மோடிக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரூ.1.5 லட்சம் விலையில் கூலிங் கிளாஸ்..! சூரியகிரகணத்தை பார்க்க ஜெர்மனியில் இருந்து பிரதமருக்கு வந்த கூலிங்கிளாஸ்..! ஆனால்?
இந்தியா முழுக்க டிசம்பர் 26ம் தேதி கங்கன சூரிய கிரகணம் தென்பட்டது. இதனை பலரும் கண்ணாடி உதவியுடன் பார்த்து ரசித்தனர். இதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் சூரிய கிரகணத்தை கறுப்பு கண்ணாடி அணிந்து பார்த்தார். பிறகு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ''எல்லோரையும் போலவே நானும் ஆர்வத்துடன் சூரிய கிரகணத்தை காண காத்திருந்தேன், ஆனால், மேகமூட்டம் காரணமாக, சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண முடியாமல் போனது,'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது மகிழ்ச்சியை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், அவர் அணிந்திருந்த கண்ணாடி என்ன பிராண்ட், அதன் விலை என்ன என்பது பற்றித்தான் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இதன்படி, ஜெர்மனியை சேர்ந்த மேபேக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள அந்த கூலிங் கிளாஸ் விலை சுமார் ரூ.1.42 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அடிக்கடி தன்னை ஏழைத்தாயின் மகன் எனக் கூறிக் கொள்ளும் மோடி, பெரும் பணக்காரர்கள் அணியக்கூடிய கண்ணாடியை எப்படி அணியலாம் என்று கூறி, பலரும் சமூக ஊடகங்களில் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் டிரெண்டிங் ஆகியுள்ளன. விளம்பர ஆர்வலரான மோடி, விளையாட்டாக பகிர்ந்த இந்த புகைப்படங்கள் அவருக்கு எதிராகவே திரும்பும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்...