வேட்பாளருக்கு திண்டாடிய வாசன்! கை கொடுத்த மூப்பனார் தம்பி!

நாடாளுமன்றத் தேர்தலில் கடைசி கடைசியாக வந்து ஒட்டிக்கொண்டவர் வாசன். ஒரு மக்களவை சீட் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் என்று முரண்டு பிடித்துக்கொண்டே இருந்தார். அப்படியென்றால் வேண்டாம் என்று அ.தி.மு.க. கண்டுகொள்ளாமல் போனபிறகு, தானே இறங்கிவந்து ஒரு சீட்டுக்கு ஒப்புக்கொண்டார்


அந்த ஒரு சீட்டுக்கு ஆள் பிடிப்பதற்கு வாசன் நாயாய் பேயாய் அலைந்தார் என்று அவரது கட்சியினர் கதை கதையாக சொல்கிறார்கள். ஒரு சீட் என்பதால் வாசனே நிற்கட்டும் என்று கட்சிக்காரர்கள் பெருந்தன்மையாக ஒதுங்கி நின்றார்கள். ஆனால், கள நிலவரம் தெரியாதவரா வாசன், நான் கட்சிக்காரருக்குத்தான் தருவேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

கட்சியில் இருந்த ஒன்றிரண்டு பணம் படைத்த பார்ட்டிகள், இவர் ஆள் தேடும் படலத்தில் இருப்பது அறிந்ததும் கண் காணாத திசைக்கு ஓடியே விட்டார்கள். ஏனென்றால் தஞ்சையில் பழனி மாணிக்கத்துடன் மோதுவது எத்தனை சிக்கல் என்று அவர்களுக்குத் தெரியும். வேட்பாளர்களுக்கு ஆள் தேடுவதில் தாமதம் ஆனதாலே உடனே அறிவிக்க முடியாத நிலையில் இருந்தார்.

கடைசியாக அவருக்குக் கை கொடுத்தவர் பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏவான ரங்கராஜன். வாசனின் பரிதாப நிலையைக் கேள்விப்பட்டு, தன்னுடைய தம்பி என்.ஆர் நடராஜனை களத்தில் நிறுத்துவதாகத் தெரிவித்தார். அதன் பிறகே வாசனுக்குத் தெம்பு வந்துள்ளது.

என்.ஆர்.நடராஜன் தற்போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் என்று சொல்லப்படுவது புரூடா என்பதை சொல்லவே வேண்டியதில்லை. கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. எப்படியோ கஷ்டப்பட்டு சைக்கிள் சின்னத்தை வாங்கிய பிறகும் ஓட்டுவதற்கு ஆள் இல்லையே என்று திணறிய ஜி.கே.வாசன் இப்போது தெம்பாக இருக்கிறார்.

ஏதோ கொஞ்சநஞ்சம் ஓட்டு வாங்கிவிட்டால், அடுத்து அவர் கை காட்டும் நபர்தான் பிரதமர், முதல் அமைச்சர் என்பதை சொல்லவும் வேண்டுமோ?