டெல்லி கலவரத்திற்கு எங்கே இருந்து வந்தார்கள் 2,000 பேர்..? இஸ்லாம் அமைப்பு அதிரடி குற்றச்சாட்டு.

டெல்லியில் முஸ்லிம் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அடையாளக் குறியீடுகள் இடப்பட்டதால் தாக்குதல்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு.


டெல்லி கலவரத்துக்காக வலதுசாரி வகுப்புவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஏறத்தாழ 2000 பேர் டெல்லியை ஒட்டிய மாநிலங்களில் இருந்து வன்முறைகளை நிகழ்த்த அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் மதத்தை அடையாளம் காண அவர்களின் பெயர்களை கேட்டுள்ளனர் என்றும் அறிக்கை வெள்யிட்டுள்ளது.

மேலும் இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, ஆயுதங்களால் குத்தப்பட்டு மற்றும் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. தற்போது வரை 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

22 வீடுகள், 322 கடைகள், 301 வாகனங்கள் மற்றும் 3 பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 16 பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் திறந்த கழிவுநீர் வடிகாலை, குற்றவாளிகள் கொலை செய்த உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை கொட்ட பயன்படுத்தியுள்ளனர். பலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

காவல்துறையினர் தங்கள் கடமைகளைத் தவிர்த்ததின் மூலமும், இந்துத்துவா வலதுசாரி கும்பலுடன் கூட்டு சேர்ந்ததன் மூலமும், சில சமயங்களில், தாக்குதல்கள், கொலை, தீ வைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றில் தீவிரமாக பங்கேற்றதன் மூலமும் வன்முறையை எளிதாக்கியுள்ளனர். 

ஆனால், இப்போது அப்பாவி முஸ்லிம்களை தொடர்ச்சியாக கைது செய்வதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதே நேரத்தில் வன்முறையை வெளிப்படையாகத் தூண்டியவர்களை காவல்துறை தொடக் கூட மறுக்கிறது. இதற்கிடையில் டெல்லி மாநில அரசும் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறையின்மையைக் காட்டியது.

பிரதம மந்திரி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மாநில முதலமைச்சர் ஆகியோர் வன்முறை நடந்த நாட்களிலும் அதற்குப் பிறகும் தங்கள் முன்னுரிமைகளில் மட்டுமே மிகவும் கவனமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை மற்றும் ஆதரவு போன்ற சில சொற்களைக் கூட சொல்லவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது.

அதனால், வன்முறையைத் தூண்டிய சங்பரிவார் தலைவர்களை கைது செய்வதை டெல்லி காவல்துறை உடனடியாகத் தொடங்க வேண்டும். டெல்லி மாநில அரசு காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்து, இடம்பெயர்ந்தோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்கு வழிவகை செய்ய வேண்டும். கொல்லப்பட்ட தலைமைக் காவலருக்கு செய்ததைப் போலவே கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் டெல்லி மாநில அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.