மோடிக்கு முதன்முறையாக திருமா முதல் வீரமணி வரை ஆதரவு...!

மூன்று வாரம் நாடு முழுவதும் ஊடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.


திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் மோடியின் அறிவிப்பை வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ளார். மோடியின் அறிவிப்புக்கு ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக போன்ற கட்சிகள் முதல்நிலையில் வரவேற்பு தெரிவித்தது, அறிந்ததே.

அதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், நீண்ட காலம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும்வகையில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

’’இந்திய பிரதமர் மோடி ‘கையெடுத்து கும்பிடுகிறேன் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருங்கள், வீட்டை விட்டு வெளியே வந்தால் உங்கள் வீட்டுக்குள் கொரோனா அடியெடுத்து வைக்கும்’ என்று மிகுந்த உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.

இந்த 21 நாள் ஊரடங்குக்கு அடிப்படையான காரணம் நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கும் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் இதை விட்டால் வேறு வழியில்லை என்பதுதான். ஏராளமான பொருளாதார சிக்கல்களை சந்திக்கலாம் வேறுபல நெருக்கடிகளை சந்திக்கலாம்.

ஆனால், வேறு வழியில்லை பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்! நாட்டு நலன்களுக்காக நமது நலன்களுக்காக நம்முடைய குடும்பத்தினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக...”என்று திருமாவளவன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

“ஏப்ரல்14ஆம் தேதிவரை அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ எனக் கூறியுள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, “இத்தாலி போன்ற நாடுகளில் அரசின் உத்தரவைக் கடைப்பிடிக்காததால் சீனாவை மிஞ்சும் அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன;

ஆனால், தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததால் மிகக் குறைவான உயிரிழப்புகளே ஏற்பட்டிருக்கின்றன”என்று குறிப்பிட்டுள்ளார்.