ஜாமீனில் வெளியான கைதியை தீர்த்துக்கட்டிய நண்பர்கள்! திடுக்கிட வைக்கும் காரணம்

தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் சிவகுருநாதன் (வயது 28). இவர் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.


சமீபத்தில் திருட்டு வழக்கில் கைதான அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.14-ந்தேதி சிவகுருநாதன் கொலை செய்யப்பட்டு, உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் முல்லை பெரியாற்றில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகுருநாதனை கொலை செய்த நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் சிவகுரு நாதனை கம்பம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களே தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலையில் தொடர்புடைய கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்த மணிகண்டன் (31), பிரவீன்குமார் (26), முத்துப்பாண்டி(26), பழனிகுமார்(52), கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஆசை (25), கணேசன் (39), விக்னேஷ்வரன் (26), சுருளிப்பட்டி ரோட்டை சேர்ந்த முத்துக்குமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன் கட்டிட தொழிலாளி. இவரும், கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்த பிரவீன்குமார், மணிகண்டன் ஆகியோரும் நண்பர்கள். சிவகுருநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்தார். மேலும் தனது நண்பர்கள் என்று பாராமல் பிரவீன்குமார், மணிகண்டனிடமும் தகராறு செய்தார். இதனால் அவர்கள், சிவகுருநாதனுடனான தங்களது நட்பை துண்டித்தனர்.

இதற்கிடையே சிவகுருநாதன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் அவரை கைதுசெய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த சிவகுருநாதன், கட்டிட வேலைக்காக சென்னைக்கு சென்றார். இந்தநிலையில் கொலை நடந்த 3 தினங்களுக்கு முன்பு சிவகுருநாதன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அப்போது தன்னை திருட்டு வழக்கில் நண்பர்கள் தான், போலீசில் மாட்டி விட்டதாக கூறி தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பிரவீன்குமார் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கம்பம் அருகே சுருளிப்பட்டி தொட்டமாந்துறை ஆற்று பகுதிக்கு மது குடிக்க சிவகுருநாதனை அழைத்துள்ளனர். பின்னர் அங்கு அவரை மதுகுடிக்க வைத்து, மணிகண்டன், பிரவீன்குமார் மற்றும் 6 பேர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை முல்லைப் பெரியாற்றில் வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது