குமரியில் பிரான்ஸ் உளவாளிகள்! தீயாய் பரவும் தகவல்! உண்மை என்ன தெரியுமா?

கன்னியாகுமரியில் பிரான்ஸ் உளவாளிகள் நுழைந்துவிட்டதாக வெளியாகும் தகவலின் உண்மை பின்னணி அதிர வைப்பதாக உள்ளது.


கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டாரங்களில் திடீரென இரண்டு வெளிநாட்டினர் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டிகளில் இருக்கும் நபர்களில் ஒருவர் ஆர்த்தர் ரோலன்ட் ரானே, மற்றொருவர் ஜூசஸ் டாமின் என்று குறிப்பிடப்படப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் இருவருமே பிரான்ஸ் உளவாளிகள் என்றும் அவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

   இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னது? குமரியில் பிரான்ஸ் உளவாளிகளா என்று அச்சம் கலந்த கேள்வியுடன் கடந்து சென்றனர். இதற்கு இடையே கன்னியாகுமரியில் வைத்து சென்னையை சேர்ந்த செய்தியாளர்கள் ஆனந்த் குமார், ஸ்ரீராம் ஆகியோரை டி.எஸ்.பி பாஸ்கரன் விசாரணைக்கு அழைத்துச் சென்றார். இதன் பிறகு இருவரையும் அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று டி.எஸ்.பி சிறை வைத்துள்ளார்.

   அப்போது அங்கு முதலில் அதி தீவிர குற்றங்களை விசாரிக்கும் க்யூ பிராஞ்ச் போலீசார் வந்து செய்தியாளர்கள் இருவரிடம் விசாரித்துள்ளனர். அதன் பிறகு மத்திய உளவுத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மாநில உளவுத்துறை அதிகாரிகளும் செய்தியாளர்களை தங்கள் பங்குக்கு விசாரித்துள்ளனர். இந்த விசாரணை எந்த விவகாரம் குறித்து நடைபெறுகிறது என்பது குறித்து போலீசார் மூச்சுவிடவில்லை.

   மாநிலம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கன்னியாகுமரி போலீசாரை தொடர்பு கொண்டு பேசிய போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் பிறகு மூத்த வழக்கறிஞர் ஒருவர் தலையிட்ட பிறகே ஆறு மணி நேரத்திற்கு பிறகு செய்தியாளர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே வந்த பிறகு தான் பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.



   பிரான்சில் பார்பிடன் ஸ்டோரிஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இணையதளத்தின் பத்திரிகையாளர்களான ஆர்தர் போவர்ட், ஜுல்ஸ் கிராடட் ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வரும் கனிம மணல் தொழில் குறித்து செய்தி சேகரிக்க சென்னை வந்துள்ளனர். சென்னையில் இருந்து செய்தியாளர்கள் ஆனந்த்குமார், ஸ்ரீராம் ஆகியோரை அழைத்துச் கொண்டு அவர்கள் இருவரும் கன்னியாகுமரி சென்றுள்ளனர்.

   கன்னியாகுமரியில் இருந்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் துணையுடன் பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் இருவரும் மணவாளர்குறிச்சியில் செயல்பட்டு வரும் இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ரேர் எர்த் லிமிட்டெட் என்று தொழிற்சாலைக்கு சென்றுள்ளனர். இந்த தொழிற்சாலை இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வருவது. மிகுந்த பாதுகாப்பு வசதிக்கு உட்பட்டது மற்றும் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

  இந்த ஆலைக்குள் பிரான்ஸ் செய்தியாளர்கள் இருவரும் தடையை மீறி சென்றுவிட்டதாகவும், அவர்களை கன்னியாகுமரி அழைத்து வந்த காரணத்தினால் செய்தியாளர்கள் இருவரையும் போலிசார் பிடித்து விசாரித்ததும் தெரியவந்தது. இதனிடையே பிரான்ஸ் செய்தியாளர்கள் இருவர் மீதும் குற்ற நடவடிக்கைக்காக தடையை மீறுதல், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைதல், போலி பாஸ்போர்ட் பயன்படுத்துதல், குற்றத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

   ஆனால் கன்னியாகுமரியில் இருந்து உடனடியாக வெளியேறிய பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் இருவரும் உடனடியாக தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டனர். இதனால் அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இதனிடையே பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் இருவரும் பாரீசில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கன்னியாகுமரி போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

   அதன் படி தாங்கள் நுழைவு வாயிலில் உரிய அனுமதி பெற்றே இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் நிறுவனத்திற்குள் சென்றதாகவும், உள்ளே சென்று தாங்கள் பத்திரிகையாளர்கள் என்று கூறியதும் அங்கிருந்து அதிகாரி தங்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாகவும், தாங்கள் உடனடியாக வெளியேறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசாரோ, நுழைவு வாயிலில் தகராறு செய்து உள்ளே சென்ற இருவரும் அங்கு தடை செய்யட்ட பகுதிகளில் புகைப்படம் எடுத்தாக கூறியுள்ளனர். இதனால் பிரான்ஸ் பத்திரிகையாளர்களை பா.ஜ.க தரப்பு கன்னியாகுமரியில் உளவாளிகள் என்று தகவல்களை பரப்பி வருவது தெரியவந்துள்ளது.