கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வட மாநிலத்தவர் ஒருவர் செத்துக்கிடந்த வழக்கில் அருகே இருந்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை கைது செய்தது போலீஸ். அவரும் சற்றே மனநலம் தவறியவர் போன்று நடந்துகொண்டது ஒரு காரணம் என்றால், சிசிடிவி புட்டேஜில், செத்துக்கிடந்தவர் உடலை பிரான்சிஸ் கிருபா மடியில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
காப்பாற்ற போன எழுத்தாளரை கொலையாளி ஆக்கிய போலீஸ்! சென்னை பகீர்!

இந்த நிலையில், செத்துப்போன நபருக்கு வலிப்பு வந்ததாகவும், அதிலிருந்து அவரை மீட்கப்போனதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், வலிப்பு நிலையில் இருந்தே அவர் செத்துப்போயிருக்கிறார். கண் முன்னே மரணத்தைப் பார்த்த பிரான்சிஸ் கிருபா அதிர்ச்சியில் இருக்கவே, அவரை கைது செய்து போலீஸ் கொண்டுபோனது.
இந்த விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டர் ரிப்போர்ட்டில், அந்த மரணம் ஹார்ட் அட்டாக் என்று தெரியவரவே, உடனே பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், தமிழ் எழுத்தாளர்கள் நிலைமை எந்த அளவுக்குக் கேவலமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த விவகாரம் உதவி செய்துள்ளது என்பதுதான் உண்மை.
கொலையாளி என்ற சந்தேக முத்திரைக் குத்தப்பட்ட கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர்,பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். `கன்னி' என்ற புதினத்திற்காக 2007-ல் ஆனந்த விகடன் விருது பெற்றுள்ளார்.
சமீபகாலமாக குடிப் பழக்கத்தால் கொஞ்சம் தன்னிலை மறக்கும் சூழலில் வாழும் பிரான்ஸிசுக்கு எழுத்தாளர் சங்கம் அல்லது இயக்குநர்கள் சங்கம் உரிய உதவி செய்து சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் தமிழுக்கும் உதவி செய்யும் நிறைவுக் கிடைக்கும் என்று தமிழ் படிப்பாளிகள் ஏங்குகிறார்கள்..