பெண்களை அரை நிர்வாணமாக்கி சித்ரவதை! வனத்துறையினர் மீது பகீர் புகார்!

காட்டுக்குள் பொருட்கள் சேகரிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.


தேனி மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடமலைக் குண்டுவில் 50க்கும் அதிகமான பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் ஆதிவாசிகள் குடியிருப்பு உள்ளது. இவர்களில், ஆண்களும், பெண்களுமாக, 10க்கும் மேற்பட்டோர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் சுருளிமலை வனப்பகுதியில், தேன் உள்ளிட்ட வனப் பொருட்களை சேகரிக்கச் சென்றுள்ளனர். 

அப்போது, அவர்களை வழிமறித்த வனத்துறையினர் அரைநிர்வாணம் செய்து, பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்டுள்ளனர். அதனை, குழுவில் இருந்த பழங்குடியின ஆண்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அவர்களையும் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். அத்துடன், அவர்களில் சிலர் மீது பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளனர். 

சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் பல தரப்பிலும் வெளியாக, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், இது பொய்யான வழக்கு என்ற உண்மை தெரியவந்தது. 

இதன்பேரில், வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சிறையில் இருந்த 4 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ஒருவர் ஏற்கனவே வழக்கு விசாரணை நடந்த காலத்திலேயே உயிரிழந்துவிட்டார். 

ஆனால், பொய் வழக்கை தொடர்ந்த மேகமலை வனச்சரகர் காஜா மொய்தீன், வருசநாடு வனச்சரகர் கர்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

அத்துடன், வறுமையில் வாடும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இத்தகைய சம்பவங்களில் சிக்கி பாதிக்காமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.  

செய்யாத குற்றத்திற்காக, பழங்குடியின மக்களை, அதிகார துஷ்பிரயோகம் செய்து தண்டனைக்கு உள்ளாக்கிய வனத்துறையினர் மீது பல தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது.