கமிஷனர் விஸ்வநாதனை பணி நீக்கம் செய்ய போர்க்கொடி! வேலுமணிக்காக பஞ்சாயத்து செய்தாரா?

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை பணிநீக்கம் செய்யக்கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் இன்று புகார் மனு அளித்துள்ளது.


விஸ்வநாதனுக்கு எதிராக அறப்போர் இயக்கம் செயல்பட்டு வரும் வேளையில், இப்போது சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் அதே கோரிக்கையில் ஒன்றிணைந்துள்ளது. இவை இரண்டுமே தி.மு.க. ஆதரவுடன் செயல்படுபவை என்று போலீஸ் குற்றம் சாட்டுகிறது.

விஸ்வநாதன் குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் புகார் இது. கடந்த 02.01.2020 அன்று அறப்போர் இயக்கம் என்ற சமூக நல இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்களைப் பற்றி வெளியிடப்பட்ட செய்தி ஒன்றினைப் படித்தேன்.

அதில் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து அறவழிப்போராட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு 20-6-2019 அன்று ஆணையரைச் சந்தித்த அறப்போர் அமைப்பின் நிர்வாகிகளிடம் “அறப்போர் இயக்கப் போராட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடமிருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், பிரச்னைகள் தீர அமைச்சர் வேலுமணியைச் சந்தியுங்கள்” என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அவர்கள் கூறியதாக செய்தி உள்ளது.

 அறப்போர் இயக்கமானது தமிழகத்தின் சமூக நல இயக்கங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சட்டவிழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது, அமைச்சர்கள்-உயர் அதிகாரிகள் செய்யும் ஊழல்களை விரிவான ஆதாரங்ளோடு அம்பலப்படுத்துதல், நீராதாரங்களைக் காப்பது, சமூகத்தில் நிகழும் அனைத்துவிதமான அநீதிகளுக்கு எதிராகவும் குரல்கொடுப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் இயக்கம்தான் அறப்போர் இயக்கம் ஆகும். இவ்வியக்கத்தின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பின் வழியாகப் பாராட்டுகள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட மதிப்புக்குரிய இயக்கமானது ஆதாரமில்லாமல் எந்தக் குற்றச்சாட்டுகளையும் பொதுவெளியில் முன்வைக்காது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். இந்த பின்னணியில், 02.01.2020 அன்று அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை போலீஸ் கமிஷனர் கி.ரி.விஸ்வநாதன் அவர்கள் அறப்போர் நிர்வாகிகளை அமைச்சர் வேலுமணியைச் சந்திக்கச் சொன்னதாக வெளியாகியுள்ள அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

 சென்னையில் போராட்டங்கள் நடத்துவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு போராட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது அல்லது மறுப்பது என்பதுதான் போலீஸ் கமிஷனரின் பணியாகும். குறிப்பிட்ட அமைச்சர் தனக்கு அழுத்தம் கொடுப்பதால், போராட்டத்திற்கு அனுமதி கொடுக்க இயலாது என்று கூறுவதும் அமைச்சர் வேலுமணியைச் சந்திக்கச்சொல்வதும் அப்பட்டமான சட்டவிதிமீறலாகும். போராட்டங்களுக்கு அனுமதிபெறுவதற்கு அமைச்சரைச் சந்திக்கச் சொல்வது, அரசியல் சாசனம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். 

சென்னை மாநகர மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து சட்டத்தைக் காக்க வேண்டிய சென்னை போலீஸ் கமிஷனர் திரு.கி.ரி.விஸ்வநாதன் அவர்கள் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுகிறது. எனவே, அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள இக்குற்றச்சாட்டு குறித்து விரிவாக விசாரித்து, விஸ்வநாதனை பணிநீக்கம் செய்து உத்தரவிடவேண்டும் என்று சட்டப் பஞ்சாயத்து கேட்டுக்கொண்டுள்ளது.