தி.மு.க.வில் அமைச்சர் பதவிக்கு இளைய எம்.எல்.ஏ.க்களிடம் அடிதடி சண்டை! பலே பலே!!

பிள்ளை பிறக்கும் முன்னரே பெயர் வைத்த கதை போலத்தான் இருக்கிறது தி.மு.க.வின் நிலவரம். தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே, யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி என்று தங்களுக்குள் சண்டை போட்டு வருகிறார்கள்.


தி.மு.க.வின் ஆதரவு பத்திரிகை மற்றும் லயோலாவின் பழைய மாணவர் என்று சொல்லிக்கொள்ளும் நபர் எடுத்த கருத்துக்கணிப்புகளின்படி தி.மு.க. இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளில் 19 தொகுதிகளைக் கைப்பற்றுகிறதாம். அதனால், தேர்தல் முடிவு வந்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்று அறிவாலயத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இப்போதே யார், யாருக்கு என்னென்ன பதவிகள் என்று அடித்துக்கொள்கிறார்கள். வழக்கம்போல் துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி போன்ற பெரிசுகளுக்கு ஒதுக்கியது போக மற்றவர்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதுதான் அறிவாலயப் பேச்சாக இருக்கிறதாம்.

குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, ஐ.பி.செந்தில்குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்குமாம். பணம் வரும் துறை எனக்குத்தான் வேண்டும் என்று இப்போதே துண்டு போட்டு வைக்கிறார்கள்.

இவர்கள் அடித்துக்கொள்வதைப் பார்த்து அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் போன்றவர்கள் நேரடியாகவே ஸ்டாலினிடம் கேட்டு திட்டு வாங்கிக்கொண்டார்களாம். என்னமோ, இப்படியாவது சந்தோஷமா இருக்கட்டுமே தளபதி.