பெண்கள் வீட்டிலேயே கட்டாயம் மார்பகத்தை சுயமாக பரிசோதித்து கொள்ளவேண்டும்! இவ்வாறு..

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க பெரிய கருவிகளோ நவீன தொழில்நுட்பமோ தேவையில்லை.


வீட்டில் செய்யும் எளிய சுயபரிசோதனையின் மூலம் பெண்களே தங்களைப் பரிசோதித்து அறிந்துகொள்ள முடியும்' என்கின்றனர் புற்றுநோய் மருத்துவர்கள். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி முடிந்தவுடன் மார்பகத்தைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்குப் பால் புகட்டிய பின் பரிசோதிக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி முற்றுப்பெற்றவர்கள், கருப்பையை நீக்கியவர்கள் ஆகியோரும் மாதம்தோறும் குறிப்பிட்ட ஒரு தேதியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* கண்ணாடியின் முன்நின்று தோள்பட்டையை நேராகவும் கைகளை இடுப்பிலும் வைத்துக்கொண்டு மார்பகங்கள் இயல்பான வடிவிலும் நிறத்திலும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

* அடுத்ததாக, கைகளை உயர்த்திக்கொண்டு மேற்சொன்ன அனைத்தையும் கவனிக்கவும்.

* மூன்றாவதாக, ஒருபுறமாக ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு வலது கையினால் இடது மார்பகத்தையும் இடது கையினால் வலது மார்பையும் பின்வருமாறு சோதிக்க வேண்டும்.

விரல்களை ஒன்றாகச் சேர்த்துவைத்துக்கொண்டு விரல்நுனிகளால் மென்மையாகவும் அழுத்தமாகவும் சிறிய வட்டங்களாக மார்பகம் முழுவதும் அழுத்திப் பார்க்கவேண்டும்.  காம்பிலிருந்து ஆரம்பித்து வட்டவடிவில் சிறிய வட்டத்திலிருந்து பெரிய வட்டமாக மார்பகத்தின் வெளிச்சுவர் வரை பரிசோதிக்க வேண்டும். அக்குள் பகுதியிலும் மாற்றங்கள் தெரிகிறதா என்று இதே முறையில் பரிசோதிக்க வேண்டும். பரிசோதனையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரை  அணுக வேண்டும். சுயபரிசோதனையின்போது கட்டிகள் தென்பட்டால் மும்முனைப் பரிசோதனை செய்ய வேண்டும். முதலில் மருத்துவர்கள் மார்பகத்தைப் பரிசோதனை செய்வார்கள். 

மேமோகிராம்

அதற்கு அடுத்தபடியாக, 40 வயதுக்குட்பட்ட பெண்கள் அல்ட்ராசோனாகிராம் ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வயதினருக்கு பால் சுரக்கும் திசுக்கள் அதிகமாகவும் மார்பகம் கனமானதாகவும் இருக்கும் என்பதால் புற்றுநோய் பாதிப்பை மேமோகிராமால் துல்லியமாகக் கண்டறியமுடியாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாம். இப்பரிசோதனைகளுக்குப் பின்னும் கட்டியின் தன்மையை அறிய முடியவில்லை என்றால் `பையாப்சி' (Biopsy) எனும் திசுப்பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகத்தில் இருக்கும் செல்களைச் சேகரிப்பது, திசுக்களை எடுத்துச் சோதிப்பது என திசுப்பரிசோதனை இரண்டு வகையாகச் செய்யப்படும்.

இதுதவிர, மார்பகத்தில் கட்டி இருந்து வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், மார்பகத் தோலில் சுருக்கமோ வீக்கமோ இருந்தால், காம்பு உள்நோக்கி இழுக்கப்பட்டிருந்தால், புண், வலி, சிவப்பு நிறம் தடிப்பு போன்ற அறிகுறிகள் தெரிந்தால், காம்பிலிருந்து நீரோ, ரத்தக்கசிவோ, சீழோ வந்தால், மார்பகங்கள் சமஅளவில் இல்லாதிருந்தால், அக்குள் பகுதியில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பரிசோதனை

புற்றுநோய் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சையின் மூலம் அதற்குத் தீர்வு காண முடியும். மார்பகத்தையும் இழக்காமல் காப்பாற்ற முடியும்" என்கிறார்கள் டாக்டர்கள். 

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது கூட்டு முயற்சியே. முதலில் நோயாளிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய் உறுதிசெய்யப்பட்டால் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிரியக்கம் எனப் பல்வேறு நிபுணர்களின் கூட்டுமுயற்சியால் புற்றுநோய்க்குத் தீர்வு காண முடியும். அதனால் சுய பரிசோதனை செய்வோம், மார்பகங்களைப் பாதுகாப்போம்.