பிள்ளைகள் என் ஜாடையில் இல்லை! 2 மகன்களை குத்திக் கொன்ற கொடூர தந்தை! 2 மகள்கள் உயிர் ஊசல்!

மனைவி மீதான சந்தேகத்தில் பெற்ற மகன்களையே கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


உத்தரப் பிரதேச மாநிலம், நிர்மல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹ்டாஷ். டெய்லர் வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி, 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரோஹ்டாஷ்க்கு தனது  குழந்தைகள் மீது ஒருவித சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதாவது, அவரது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், குழந்தைகள் தனது ஜாடையில் இல்லை எனவும், அவர் தொடர்ந்து சந்தேக தீயில் சுற்றியிருக்கிறார். 

இதன்பேரில், ஜூன் 9ம் தேதியன்று தனது 4 குழந்தைகளையும் கத்தரிக்கோலால் அவர் சராமரியாக குத்தியுள்ளார்.  இதில் அவரது மகன்கள் ரவி, ஆகாஷ் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம்,  அவரது மனைவி மற்றும் மகள்கள் சலோனி, ஷிவாணி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுபற்றி வழக்குப் பதிந்த போலீசார் குறிப்பிட்ட நபரை கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில், நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனுக்கு எப்படி நான்கு குழந்தைகளையும் பெற்று இருப்பேன் என்று அந்த பெண் கதறியபடி கேட்டது அனைவரையும் கலங்க வைத்தது.

தனக்கு யாருடனும் தொடர்பு இல்லை என்றும் குடித்துவிட்டு வந்து இப்படி தனது கணவன் கொடூரத்தை அரங்கேற்றிவிட்டதாக கூறி அந்த பெண்மணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.