மொய் கணக்கு கேட்டு முதலிரவை தடை செய்த தந்தை! அடித்தே கொன்ற மகன்! அரியலூர் அதிர்ச்சி!

'முதலிரவுக்குப் போகும் முன் மொய்க் கணக்கு சொல்லு,' என்று டார்ச்சர் செய்த தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளமதிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு கிடைத்த மொய்ப்பணம் மற்றும் வரவு செலவுகள் குறித்து, தந்தையும் மகனும், திருமண நாள் இரவு கணக்கு பார்த்துள்ளனர்.

ஆனால், கணக்கில் சற்று குழப்பம் வந்ததாகக் கூறப்படுகிறது. எவ்வளவு முறை கணக்கை சரிபார்த்தும் பிரச்னை தீரவில்லையாம். இதன்போது, தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சாந்தி முகூர்த்தம் செல்ல தாமதமான காரணத்தால்,  மகன் இளமதி எழுந்து சென்றுள்ளார்.

அவரை வழிமறித்துக் கொண்டு, வரவு, செலவை சரியாக சொல்லாத வரைக்கும், உன்னை சாந்தி முகூர்த்தம் கொண்டாட விடமாட்டேன், என அடாவடி செய்துள்ளார் தந்தை. இதன்போது, இளமதி கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். உடனே அருகில் கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து, தந்தை என்றும் பாராமல் தலையில் நச்சென அடித்து கீழே தள்ளிவிட்டாராம்.

இதில், சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பின்னர், சண்முகத்தின் இளைய மகன் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் வந்து, இளமதியை கைது செய்தனர். முதலிரவு கொண்டாட வேண்டிய நபர் தற்போது கம்பி எண்ணி வருகிறார்.