அதிகாரிகளின் கால்களை கண்ணீரால் கழுவிய ஏழை விவசாயிகள்! பதற வைக்கும் காரணம்!

தெலங்கானா மாநிலத்தில் நில விவகாரத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை பறித்துவிட வேண்டாம் என விவசாயிகள் அரசு அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சு கதறி அழுவதும், அதை அதிகாரிகள் அலட்சியமாக புறக்கணித்து நகர்ந்து செல்லும் காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்துள்ளன.


தெலங்கானா மாநிலத்தில் பத்திரப் பதிவில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த மாநில அரசு அனைத்து நிலங்கள் விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. இதனால் எதிர்காலங்களில் போலியாக பத்திரப் பதிவு செய்து நிலங்கள் மோசடி செய்வது தவிர்க்கப்படும்.

இந்த நிலையில் விவசாயிகளின் நிலங்கள் குறித்த விவரங்களை பதிவேற்றும் போது அரசு அலுவலர்கள் தவறாக பதிவு செய்வதாகவும் அந்தத் தவறுகளை திருத்துமாறு விவசாயிகள் கேட்டால் லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களுடைய நிலங்கள் வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அது குறித்து அரச அதிகாரிளிடம் கேட்டால் பொய் வழக்கு தொடர்வோம் என மிரட்டுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.  

அரசு அதிகாரிகள் கூறியதை கேட்டு அச்சமடைந்த விவசாயிகள் தங்கள் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பறித்துவிட வேண்டாம் என அவர்கள் காலில் விழுந்து கெஞ்சும் காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. நமக்கும் நம் குடும்பத்திற்கும் வயிறார உணவு அளிக்கும் விவசாயிகள் காலில் விழுந்து கெஞ்சும்போது நம்மை விட மூத்தவர் என்ற அடிப்படையில் கூட கண்டு கொள்ளாமல் அதிகாரி அலட்சியமாக நகர்ந்து செல்லும் காட்சிகளை பார்த்து சமூக வலைதளங்களில் பலர் தங்களது கண்டன குரல்களை எபப்பி வருகின்றனர்.

மனிதன் எது இல்லை என்றாலும் சமாளித்து வாழ்ந்து விட முடியும். ஆனால் ஒரு வேளை உணவு கிடைக்க வில்லை என்றால் ஒரு நாளுக்கு மேல் வாழ முடியாது. அப்படிப்பட்ட மகத்தான உணவை விவசாய நிலங்கள் மூலமாக தங்கு தடையின்றி வழங்கி வரும் விவசாயிகள்தான் உலக நாடுகளின் முதுகெலும்புகள். குறைந்த வருமானம் இருந்தாலும் உணவுதான் எல்லோருக்கும் பிரதானம் என்று கருதி இரவு பகல் பாராமல் சுயநலமின்றி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நிலத்திற்காக போராட்டம், தண்ணீருக்காக போராட்டம், இலவச மின்சாரத்திற்காக போராட்டம் என காலம் காலமாய் போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளின் கண்ணீர் ஏசி அறையில் பீசா சாப்பிடுபவர்களுக்கு தெரிய நியாயம் இல்லை.