ஹைட்ரோ கார்பனுக்கு உடனே சட்டம் கொண்டுவாங்க..! எடப்பாடி பழனிசாமியை கெஞ்சும் விவசாயிகள்.

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க பொதுமக்களின் கருத்துக் கேட்பும் இல்லை; சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் தேவையில்லை என மிக உறுதியாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புதான் டெல்டா விவசாயிகளை அலறவிட்டது.


ஏனென்றால், கிட்டத்தட்ட 350 இடங்களில் ஆழ்கிணறு தோண்ட கடந்த 2018 ஆண்டிலேயே மத்திய அரசிடம் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துவிட்டது. அதனால், வேதாந்தாவுக்கு நிச்சயம் அனுமதி கிடைத்துவிடும் என்றுதான் விவசாயிகள் அச்சப்பட்டனர். 

"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம். இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அனுமதிக்கமாட்டோம். அத்துடன் இது தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது' என்று தமிழக அரசு பல முறை தெரிவித்து இருந்தாலும், நம்பமுடியாமல் தவித்தனர் விவசாய மக்கள்.

இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலம்’ எனவும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பு போதாது என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை.

ஆம், உடனடியாக அமைச்சரவையை கூட்டி தனி சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் பிரச்னை இருக்காது. அப்படியில்லை என்றால், இதனை சும்மா தேர்தல் காலத்து வாக்குறியாக மட்டுமே கருதமுடியும் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள்.