ஓஎன்ஜிசி அதிகாரியை விரட்டி விரட்டி வெளுத்த நாகை விவசாயி! பதறி அடித்து ஓட்டம்! பிறகு நேர்ந்த திருப்பம்!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை தாக்கியதாக விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.


சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் எடுக்கும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பழைய பாளையத்தில் இருந்து மாதானம், எடமணல், திருநகரி உள்ளிட்ட கிராமங்கள் வழியே சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு எடுத்து செல்ல குழாய் பதிக்கும் பணியில் கடந்த 4 மாதங்களாக ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

குழாய் பதிக்கும் பணிக்காக விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே சீர்காழி அருகே திருநகரியில் ஓஎன்ஜிசி சார்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மணிகண்டன் உள்ளிட்ட விவசாயிகள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து அங்கு வந்த ஒரிசாவை சேர்ந்த மேற்பார்வையாளர் அமிரின் பர்தாஸ் பிரச்சனை என்னவென்று கேட்டார். அவரிடம் குழாய்கள் பதிப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். அப்போது அமிரின் பர்தாஸ், மணிகண்டனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமுற்ற விவசாயி மணிகண்டன், அமிரின் பர்தாசை திடீரென அடித்து உதைத்துள்ளார். மேலும் அவரை விரட்டி விரட்டியும் அடித்துள்ளார் மணிகண்டன். 

இதுகுறித்து அமிரின் பர்தாஸ் கொடுத்த புகாரில் திருவெண்காடு போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விவசாயி மணிகண்டனை கைது செய்தனர்.