40 ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு செயல்! 4 தலைமுறை ஆண்களை துரத்தி துரத்தி பலி வாங்கும் பகீர் சம்பவம்! பீதியில் பெண்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயத்திற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அடுத்தடுத்த தலைமுறையை சேர்ந்த 4 ஆண்கள் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.


பஞ்சாப் மாநிலம் போத்னா என்ற கிராமத்தில் ஜோகிந்தர் சிங் என்ற விவசாயி 40 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்திற்காக கிராமத்தில் உள்ள சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே வருமானம் இல்லாமல் அந்த கடனை அடைக்க முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தர வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டார் ஜோகிந்தர் சிங்.

அதன் பின்னர் தந்தை வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்ற கடமை அவருடைய மகன் பகவான் சிங்கை துரத்தியது. தந்தை வாங்கிய கடனை தருமாறு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் நிர்பந்திக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பகவான் சிங் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அந்த கடன் சுமை ஜோகிந்தர் சிங்கின் பேரனும், பகவான் சிங்கின் மகனுமான குல்வந்த் சிங் தலை மீது வந்துள்ளது.

கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க அவரும் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஜோகிந்தர் சிங் வாங்கிய கடனுக்காக 4ம் தலைமுறை வாரிசான குலவந்த் சிங்கின் மகன் லவ்ப்ரீத் சிங்கை கடன் கொடுத்தவர்கள் நெருக்க மன அழுத்தத்தில் இருந்த லவ்ப்ரீத் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

தற்கொலை செய்து கொண்ட லவ்ப்ரீத் சிங்கின் தாய் அடைக்க வேண்டிய கடன் 7 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாகவும், விவசாயத்திற்கு வாங்கிய கடனுக்காக 4 தலைமுறை ஆண்களை இழந்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.