வைர வியாபாரி கொடூர கொலை! பிரபல டிவி நடிகை காவல் நிலையத்தில் சரண்!

பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் வைர வியாபாரி கொலை வழக்கில் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.


மும்பையை சேர்ந்தவர் ராஜேஸ்வர் கிஷோரி லால் உதானி. 10 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி ராஜேஷ்வரின் மனைவி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜேஷ்வரின் சிதைந்த உடலை பன்வல் எனும் இடத்தில் உள்ள புதர்களுக்குள் இருந்து மீட்டனர்.   அழுகிய நிலையில் இருந்த உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரரணையை முடுக்கிவிட்டனர். தொடர்ந்து மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் சச்சின் பவார் மற்றும் தினேஷ் பவார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம்  தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ராஜேஷ்வர் கொலை வழக்கில் போலீசார் பிரபல தொலைக்காட்சி நடிகை டெபோலினா பட்டாச்சர்யாவை தேடி வந்தனர்.   போலீசார் தேடுவதை அறிந்து டெபோலினா மும்பை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் அளித்த தகவல்களின் படி மேலும் சில தொலைக்காட்சி நடிகைகளையும் போலீசார் விசாரிக்க உள்ளனர். கொலை செய்யப்பட்ட தொழில் அதிபர் ராஜேஷ்வருக்கு டிவி நடிகைகள் பலரும் தோழிகளாக இருப்பது தெரியவந்துள்ளது.   மேலும் டிவி நடிகைகளுடன் அதிக நேரம் ராஜேஷ்வர் செலவிடுவதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். ஆனால் எதற்காக அவரை கொலை செய்தனர் என்கிற விவரம் வெளியாகவில்லை. நடிகை டெபோலினா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.