ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் கால்களை இழந்தேன்! வீல் சேர் கூட வாங்கி தரவில்லை! திமுகவில் இருந்து விலகிய அதிரடி பேச்சாளர்!

திமுக தலைவர் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின் போது வேலூருக்கு சென்ற நான் ரயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்தேன். ஆனால் அதற்காக சக்கர நாற்காலி கேட்டு 4 வருடமாக அழைந்தும பலன் இல்லை என்று கூறி திமுகவில் இருந்து விலகியுள்ளார் பிரபல பேச்சாளர் தமிழ் மன்னன்.


இது தொடர்பாக தமிழ்மன்னன் எழுதியுள்ள கடிதத்தில்:- ``தி.மு.க-வில் சாவு தொண்டனுக்கு... சரித்திரம் தலைவனுக்கா? சில குடும்பங்களுக்காக மொத்த தி.மு.க தொண்டர்களும் உழைக்க வேண்டியுள்ளது. வாழ்க தி.மு.க-வின் ஜனநாயகம்" என எழுதியுள்ளார். 

அவரின் ஆதங்கத்தை முசிறி தமிழ்மன்னனிடமே கேட்டோம், ``1980-களிலிருந்து 30 வருடங்களாக தி.மு.க-வில் இருக்கிறேன். இளைஞர் அணியில் சேர்ந்த நான், தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளேன்.

தி.மு.க-வின் பிரபல பேச்சாளர்களான வெற்றிகொண்டான், நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம், கா.சுப்பு ஆகியோருடன் இணைந்தும், தனியாகவும் பல்வேறு மேடைகளில் பேசியிருக்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாகக் கறுப்பு சிவப்புக் கொடியை ஏந்தி, கட்சியின் கொள்கைகளை வீதிகளிலும், மேடைகளிலும் முழங்கி வந்தேன். இவ்வளவு உண்மையாக உழைத்தும்கூட, தி.மு.க-வில் எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால், என்னோடு அரசியலுக்குள் வந்த மாற்றுக் கட்சி நண்பர்கள், இன்று எம்.எல்.ஏ ஆகவும், எம்.பி-யாகவும் வரமுடிந்துள்ளது. ஆனால் தி.மு.க-வில் அந்த வாய்ப்பில்லை. ஏன்?

சாதி ஒழிப்புக் கொள்கையுடைய தி.மு.க-வால் ஏன் சாதி ஒழிப்பு சாத்தியமாகவில்லை? தி.மு.க-வில் சாவு தொண்டனுக்கு... சரித்திரம் தலைவனுக்கு என்பதைப்போல, தி.மு.க-வில் குறுநில மன்னர்களைப்போல் குடும்ப ஆதிக்கத்தை வளர்ப்பது சரியா? ஒருசில குடும்பங்கள் வளர்ச்சிபெற ஒட்டுமொத்த தி.மு.க தொண்டர்களும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டுமா?

கடந்த சிலவருடங்களுக்கு முன்பு, தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட, `நமக்கு நாமே' பயணத்துக்காக வேலூர் போனேன். அப்போது ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி எனது கால் துண்டானது. விபத்து பற்றித் தகவலறிந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எனது கால் அறுவைச்சிகிச்சைக்காக 1,23,000 ரூபாய் தந்து உதவி செய்தார். மேலும் எனது மகன் விஜயபாலனின் கல்விச் செலவை ஏற்று, அவரின் குடும்பத்துக்குச் சொந்தமான கேர் பொறியியல் கல்லூரியில் படிக்கவைத்தார். செய்கிறார் என்பதற்காக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவிடமே தலையைச் சொறிந்துகொண்டு நிற்பதற்கு மனம் ஒப்பவில்லை.

கலைஞர் தலைவராக இருந்தார். அவர் தொண்டர்களின் வலிகளைப் புரிந்துகொண்டார். அப்படியான சூழல் இப்போது இல்லை. தொண்டர்களின் வலியை, கட்சித் தலைமை புரிந்துகொள்ள மறுக்கிறது. நலிவடைந்த எனக்கு உதவிகேட்டு கட்சித் தலைமைக்கும், நடக்கமுடியாத எனக்கு சக்கர நாற்காலி வழங்கக்கோரியும் தி.மு.க எம்.பி-க்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலருக்கும் பலமுறை கடிதம் எழுதிவிட்டேன். பதில் இல்லை.

கடந்த நான்கு வருடங்களாக, `கழகம்' உதவிசெய்யும் எனக் காத்துக் கிடந்தேன். பதில் இல்லை. முதன்முதலில் தி.மு.க தேர்தலில் போட்டியிட்டபோது, தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என வேலைபார்த்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கடந்த தேர்தலில் பல கோடி ரூபாயை இன்றைய தலைமை கொட்டிக்கொடுத்துள்ளது. ஆனால், இந்தக் கடைக்கோடி தொண்டனுக்கு உதவ முன்வரவில்லை. இதையெல்லாம் நினைக்கும்போது மனசு கஷ்டமாக இருக்கிறது. கழகமே உயிர் என வாழும் தி.மு.க தொண்டர்களுக்கு என்ன மரியாதை? 30 வருடங்களாக, இந்த இயக்கமே உயிர் மூச்சு என வாழ்ந்தேன். காலை இழந்தும்கூட 2016 ம் ஆண்டு ராசிபுரம் மொழிப்போர் தியாகிகள் நினைவுக்கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பேசினேன். இப்படிப்பட்ட நிலையிலும் தலைமை என்மீது இரக்கப்படவில்லை.

அ.தி.மு.க-வில் யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ-வாக முடியும்; முக்கியப் பொறுப்புக்கு வர முடியும். ஆனால், அது தி.மு.க-வில் சாத்தியமில்லை. தற்போதைய தி.மு.க தலைமையால் எனக்கு எந்த உயர்வும் கிடைக்காது. அதைவிட உணவும் கிடைக்காது என்பதால் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்தேன்” என்றார்.