பேஸ்புக் நண்பர்கள்..! சந்திக்கலாம் என அழைத்த இளைஞன்..! நம்பிச் சென்ற 20 வயது பட்டதாரி..! தாய் கொண்டு சென்ற ரூ.20 லட்சம்! மதுரையில் திக் திக் சம்பவம்!

பேஸ்புக்கில் நண்பராக பழகிய இளைஞரை ஒரு கும்பல் கடத்தி சென்று பணம் பறிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் 20 மணிநேரத்தில் போலீசார் கடத்தப்பட்டவரை பத்திரமாக மீட்டனர்.


மதுரை திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் பார்த்திபன் பேஸ்புக்கில் ஏராளமான நண்பர்களுடன் பேசுவது வழக்கம். எம்பிஏ பட்டம் பெற்றுள்ள பார்த்திபன் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

பின்னர் நள்ளிரவு பார்த்திபனின் தந்தையும், முன்னாள் ராணுவ வீரருமான ராஜூவுக்கு மர்மநபர்கள் சிலர் போன் செய்து தங்களது மகன் பார்த்திபனை கடத்தி விட்டதாகவும், அவர் வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜூ தன்னை சுதாரித்துக்கொண்டு பணம் தந்துவிடுவதாக மர்மநபர்களிடம் உறுதி அளித்த அதே வேளையில் போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் பார்த்திபனின் தாய் ஆதிலட்சுமி மூலம் பணம் கொடுத்தனுப்பப்பட்டு போலீசார் ரகசியமாக பின்தொடர்ந்தனர். இதை அடுத்து வெள்ளக்கல் சாலையில் பணத்தை பெறும்போது முருகன், சரவணன் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பார்த்திபன் தூத்துக்குடி கயத்தாறு பகுதியில் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தந்திரமாக செயல்பட்ட போலீசார் பணம் கிடைத்துவிட்டதாக கைது செய்யப்பட்ட 2 பேரை வைத்து கடத்தல்காரர்களிடம் பேச வைத்தனர். அவர்களும் முருகன், சரவணன் சொன்னதை நம்பி பார்த்திபனை விடுவித்தனர். பின்னர் பார்த்திபன் பத்திரமாக வீடு திரும்பினார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். பார்த்திபனை கடத்தியவர்கள் பேஸ்புக்கில் அறிமுகம் ஆனவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. நேரில் சந்திக்கலாம் என பார்த்திபனை அழைத்து கடத்தல் நாடகம் ஆடியதும் தற்பாது தெரியவந்துள்ளது.