பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அரசியல் பதிவு போட்ட நபர்! விசாரணைக்கு வீட்டிற்கு ஆள் அனுப்பிய பேஸ்புக்! உண்மை என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பதிவிட்டதாகவும், அந்த நபரின் வீட்டுக்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியுயதாகவும் IANS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பதிவிட்ட அந்த நபர், ''பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீசார் வீட்டுக்கு வருவதை போல என் வீட்டுக்கு பேஸ்புக் அதிகாரிகள் வந்தார்கள். என்னுடைய ஆதார் அட்டையை சோதனை செய்தார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது'' என்று தெரிவித்திருந்தார் என்றும் IANS செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று பலரும் கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் செய்திதொடர்பாளர், '' பேஸ்புக்கில் பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் பேஸ்புக் ஈடுபடவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் தொடர்பான விளம்பரங்கள் பெறுவதிலும், அதை கண்காணிக்கும் நிலையிலும் மட்டுமே பேஸ்புக் ஈடுபட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.