அயோத்தி தீர்ப்பு! பாபர் மசூதிக்கு கீழ் இருந்தது இந்துக் கோவில் தான்! அடித்துச் சொல்லும் அங்கு அகழாய்வு செய்த கே.கே. முகமது!

கோழிக்கோடு: அயோத்தி தீர்ப்பு மிகச் சரியானது, என்று முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது பாராட்டு தெரிவித்துள்ளார்.


அயோத்தி நில விவகாரத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 பேர் கொண்ட  நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவும் சூழலில்,  அயோத்தியில் அகழாய்வு செய்த முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது பாராட்டு தெரிவித்துள்ளார்.  

அயோத்தி சர்ச்சையை தொடர்ந்து, கடந்த 1990ம் ஆண்டு பாபர் மசூதி இருந்த இடத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது முதல்முறையாக ஆய்வு மேற்கொண்டார். அவர்தான் பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில்  போன்ற ஒரு அமைப்பு இருந்ததாகக் கண்டறிந்தார். இதுபற்றிய ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில்தான் தற்போதைய தீர்ப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பு வெளியானதற்கு முக்கிய காரணம் முகமது தாக்கல் செய்த ஆய்வறிக்கைதான் என்பதால், அவரது கருத்தை ஊடகங்களில் கேட்க தொடங்கியுள்ளனர். இதன்படி அவர் அளித்த பேட்டியில், ''நான் முஸ்லீமாக இருந்தாலும் உண்மையை ஆய்வு செய்து சொன்னேன். அதற்காக என்னை அரசு ரீதியாக பலர் தொல்லை அளித்தனர். எனது பணியை சரிவர செய்ய விடவில்லை.

உண்மையில் தற்போதைய தீர்ப்புதான் மிகச் சிறப்பானது. இதனை நான் முழுவதுமாக வரவேற்கிறேன். கோயில் இருந்த இடத்தை இடித்துத்தான் மேலே மசூதி கட்டியுள்ளனர். அந்த கோயிலின் பொருட்களையே மசூதி சுவர் கட்டவும் பயன்படுத்தியுள்ளனர். இது ஆய்வுகளில் தெளிவாகிவிட்டது. தவறு யார் செய்திருந்தாலும் சொல்ல வேண்டியது கட்டாயமாகும்.

சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்து கோயில்களை இடித்தது உண்மைதான். அப்படியான ஆட்சியாளர்களின் தவறான செயலை ஒருவர் நியாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. இதைச் சொன்னதற்காக என்னை பலரும் விமர்சித்தனர். தற்போது உண்மையின் அடிப்படையில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.